ராமரை ஒரு கூடாரத்தில் தரிசித்த பல ஆண்டுகால வலி, நீங்கப் போகிறது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எட்டு அம்ருத் திட்டங்களுக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி, பயனாளிகளுக்கு வீடுகளின் சாவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கோயிலில், வரும் 22ஆம் தேதி ராமர் அமரப்போவது, நம் அனைவருக்கும் வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றார். மேலும், ஒரு கூடாரத்தின் கீழ் ராமரை தரிசித்து வந்த பல ஆண்டுகால வலி, நீங்க போவதாகவும் அவர் குறிப்பிட்டார். புதிய வீடுகளில் குடியேற இருக்கும் மக்கள், பெரிய கனவுகளை காண வேண்டும் என கேட்டுக்கொண்ட மோடி, மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதே தமது உத்தரவாதம் எனவும் குறிப்பிட்டார்.