"பௌர்ணமி இரவில் கருத்தரிக்க கூடாது" - பள்ளி மாணவர்களுக்கு பெண் போலீஸ் அதிகாரி அட்வைஸ்.. சர்ச்சை
புத்திசாலி குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்றால் பௌர்ணமி இரவில் கருத்தரிக்கக் கூடாது என பள்ளி மாணவர்களுக்கு, மத்திய பிரதேச காவல்துறை அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த மாநில அரசின் விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய பிரதேச மாநிலம் ஷஹ்தோல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிஐஜி சவிதா சோஹானே விரிவுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், இந்த பூமிக்கு நீங்கள் புதிய தலைமுறையைக் கொண்டு வரப் போகிறீர்கள், புத்திசாலியான குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டுமென்றால் பௌர்ணமி நாளில் கருத்தரிக்கக் கூடாது, அதற்கு திட்டமிட வேண்டும். சூரியனுக்கு முன் வணங்கி ஓஜஸ்வி சந்ததிகளைப் பெறுவதற்கு தண்ணீர் விட்டு வணங்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். இந்நிகழ்வு கடந்த அக்டோபர் மாதம் நடந்ததாக கூறப்படும் நிலையில், இக்காட்சிகள் தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து பெண் அதிகாரியிடம் கேட்ட போது, ஆன்மீக நூல்கள், இந்து ஆன்மீகத் தலைவர்களின் பிரசங்கங்கள் மற்றும் ஆன்மீக அறிவிற்கான அவரது வேட்கை ஆகியவற்றிலிருந்து அவரது அறிவுரை உருவானதாக விளக்கமளித்துள்ளார்.