பிரதமர் மோடிக்கு டொமினிகா மற்றும் கயானா நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன...கொரோனா நோய்த் தொற்றின் போது அளித்த ஆதரவு மற்றும் இந்தியா டொமினிகா உறவுகளை மேம்படுத்த பிரதமர் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டி அவருக்கு டொமினிகாவின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கயானாவில் நடந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் அதிபர் சில்வானி பர்டன், டொமினிகா விருதை வழங்கி கௌரவித்தார். இந்த விருதை 140 கோடி இந்திய மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்... மேலும் சில்வானி பர்டனுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்... அதேபோல் கயானா நாட்டின் உயரிய தேசிய விருதான "The Order of Excellence " விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது... கயானா அதிபர் முகமது இர்ஃபான் அலி இந்த விருதை வழங்கினார். விருதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி இந்திய மக்களுக்கும், இரு நாட்டு மக்களுக்கும் இடையே ஆழமாக வேரூன்றிய வரலாற்று உறவுகளுக்கு இந்த மரியாதையை அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். பார்படாஸ் நாட்டின் உயரிய விருதையும் பிரதமர் மோடி பெறவுள்ளார். இதன் மூலம் அவரது சர்வதேச விருதுகளின் எண்ணிக்கை 19ஆக அதிகரிக்கவுள்ளது. முன்னதாக, நைஜீரியாவும் “கிராண்ட் கமாண்டர் ஆஃப் ஆர்டர் ஆஃப் நைஜர்“ விருது தந்து பாராட்டியது. இதன் மூலம் இந்த விருதைப் பெறும் 2வது வெளிநாட்டுப் பிரமுகர் என்ற பெருமையைப் பிரதமர் மோடி பெற்றார். மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் மட்டுமே 1969ல் இந்த விருதைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.