தேசத்தின் தலையெழுத்தை மாற்றிய `நீல' டர்பன்... ஓடி வந்து கைகொடுத்த மோடி- சாதித்த மாஸ்டர் மைண்ட்

Update: 2024-12-27 17:33 GMT

இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி என போற்றப்பட்ட 2 முறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின், வரலாற்றை நினைவு கூறுகிறது இந்த தொகுப்பு

மென்மையான, புத்திசாலித்தனமான செயலால் இந்திய அரசியலில் தனக்கென தனியிடம் பிடித்தவர் மன்மோகன் சிங்.

1932 செப்டம்பர் 26-ல் பிரிட்டிஷ் இந்தியாவில், இப்போது பாகிஸ்தானின் பஞ்சாப்பின் கா எனும் கிராமத்தில் பிறந்தவர். இந்திய பிரிவினையின் போது பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்தது அவரது குடும்பம்.

மண்ணெண்ணெய் விளக்கில் மங்கலான வெளிச்சத்தில் படித்தவர் பின்னாளில் இந்திய பொருளாதாரம் பிரகாசிக்க தன்னையே தீக்குச்சியாக்கியவர்.

பொருளாதாரத்தில் அவரது அறிவுத்தேடல் எத்தனை வலிமையானது என்பதற்கு அவரது கல்வியே சான்று.

அமிர்தசரஸ் இந்து கல்லூரி, பஞ்சாப் பல்கலை, கேம்பிரிட்ஜ் பல்கலை உயர்கல்வி, 1962-ல் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம்.

பல்கலையில் சிறந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆடம் ஸ்மித் பரிசு என சொல்லிக்கொண்டே போகலாம்... பஞ்சாப் பல்கலையில் பேராசிரியராக பணியை தொடங்கியவர். 1971-ல் வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசராக பணியில் சேர்ந்தார். அப்போது ஒரே ஆண்டில் முக்கிய பதவி அவரை தேடிவந்தது. 1972-ல் நிதியமைச்சக தலைமை பொருளாதார ஆலோசகர், 1982 முதல் 1985 வரையில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், 1985 முதல் 1987 வரையில் திட்ட கமிஷனின் துணை தலைவர் என இந்திய அரசு பணிகளில் முக்கிய பதவிகளை வகித்தவர்.

1991-ல் நரசிம்மராவ் தலைமையில் ஆட்சியமைந்த போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது இந்தியா.

இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவரால்தான் முடியும் என முடிவெடுத்த நரசிம்மராவ் மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக்கினார்.

1991 அக்டோபர் ஒன்றில் முதல் முறையாக அசாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். நிதியமைச்சராக தாரளமயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகளை அமல்படுத்தி அதிரடி காட்டியவர் மன்மோகன் சிங்

புதிய தொழில் உருவாக்கம், நடுத்தர வர்த்தகர்கள் கைகளில் வருமானம், ஏற்றுமதி/இறக்குமதி விதிகள் தளர்வு, வணிகம் செய்வதற்கு எளிமையான சூழல் உருவாக்கம், தொழில்முனைவோர் அதிகரிப்பு என நாட்டை திவால்நிலையில் இருந்து மீட்டவர் மன்மோகன் சிங்.

1998 முதல் 2004 வரையில் பாஜக ஆட்சியில் மாநிலங்களவையில் எதிர்கட்சி தலைவராக சிறப்பாக பணியாற்றியவர்.

2004-ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் ஆனார் மன்மோகன் சிங். அப்போது இந்த பதவிக்கு இவர் சரியானவர் இல்லை என்று அப்போது எழுந்த விமர்சனங்களை தனது செயல்திறனால் மாற்றிக்காட்டினார்.

ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி பெரும் புரட்சி செய்தவர். மகளிருக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க 2005-ல் சட்டம், தேசிய புலனாய்வு பிரிவு உருவாக்கம், தகவல் அறியும் சட்டம், கல்வி பெறும் உரிமைச் சட்டம், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்ப்பந்தம் என சாதித்து காட்டியவர்.

2009-ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோதும் பிரதமர் ஆனார் மன்மோகன் சிங். அவரது இரண்டாவது பதவிக்காலம் பல ஊழல்கள் மற்றும் பல அமைச்சர்கள் மீது பரவலான ஊழல் குற்றச்சாட்டுகளால் சிதைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்