"கேரள நர்ஸ்க்கு நாங்க மரண தண்டனை கொடுக்கல.. அந்த கூட்டத்தோட கையில சிக்கிட்டாங்க’’
கேரள செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏமன் அதிபா் உறுதி செய்யவில்லை என, அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.ஏமனில் தனது பாஸ்போர்ட்டை அபரித்துக்கொண்டு கொடுமை செய்த மஹதி என்பவரை கொலை செய்த வழக்கில், கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிபர் உறுதி செய்துவிட்டதாகவும், ஒரு மாதத்திற்குள் மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கடந்த வாரம் தகவல் வெளியானது. நிமிஷாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிபர் ரஷத் அல்-அலிமி உறுதி செய்யவில்லை என, டெல்லியில் உள்ள ஏமன் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. அதேசமயம், நிமிஷா தொடா்பான வழக்கு முழுமையாக ஹூதி கிளா்ச்சியாளா்களால் கையாளப்பட்டு வருகிறது என்பதை, தாங்கள் தெளிவுபடுத்த விரும்புவதாக ஏமன் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.