மதுராவில் உள்ள ராதா கோபால்பாக் மைதானத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பட்டாசு வாங்க வந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பட்டாசு கடை நடத்தி வருவபர்கள், தங்கள் பட்டாசுகளை பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். சம்பவம் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் 20 பட்டாசு கடைகள், 28 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தன. 15 பேர் தீக்காயம் அடைந்து, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேரின் நிலைமை வலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போதிய அளவில் தீத்தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.