பரமக்குடியில்,1954-ம் ஆண்டு நவம்பர் 7-ம் நாள் வழக்கறிஞர் டி.சீனிவாசன் - ராஜலட்சுமி தம்பதியருக்குக் கடைசி மகனாகப் பிறந்தவர் தான் பார்த்தசாரதி என்கிற கமல்ஹாசன்.
1960-ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா’ கமலின் முதல் திரைப்படம். தனது 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே ஜனாதிபதியின் கைகளால் தங்கப்பதக்கத்தைப் பெற்றார் கமல்ஹாசன்...
தொடர்ந்து அன்றைய தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக விளங்கிய எம்ஜிஆர், சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன் ஆகியோருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்
ஒரு பெரும் இடைவேளைக்குப் பிறகு 1973-ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அரங்கேற்றம் எனும் திரைப்படத்தில் மூத்த நடிகர் சிவகுமாருடன் இணைந்து நடித்தார்.
ஆனால், தமிழ் சினிமாவிற்கு முன்னரே கமலஹாசனை கதைநாயகனாக்கி அழகு பார்த்தது மலையாள சினிமா.
`கன்னியாகுமரி’ என்ற மலையாளப் படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். `அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக உருவெடுத்தார்.
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முதல் அடி எடுத்து வைக்கும் போது, தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகள் அனுபவத்தோடு போராடி தன் வெற்றியை பதிவு செய்திருந்தவர் கமலஹாசன்
இதுவரை நான்கு தேசிய விருதுகளும், இந்தியாவின் மிக உயரிய விருதுகளாகக் கருதப்படும் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், செவாலியே உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், கதை-திரைக்கதை ஆசிரியர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், ஒப்பனைக் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைகொண்டவர் கமல்ஹாசன்.
கலை சார்ந்த தன் ஈடுபாடுகளை தாண்டி தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள் ஏராளம்...
தமிழ் சினிமாவில் முதன் முதலில் 1992 ஆம் ஆண்டு வெளியான தேவர்மகன் திரைப்படத்தின் திரைக்கதையை, மென்பொருளில் எழுதி ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியவர் கமல்ஹாசன்.
இவர் இந்திய சினிமாவில் அறிமுகப்படுத்திய அவிட் மென்பொருள், அனிமேஷன், ஆரோ 3d ஒலி உள்பட பல்வேறு தொழில்நுட்பங்கள் வரிசை கட்டி நிற்க, சென்ற செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்கா சென்ற கமல்ஹாசன், அங்கேயே தங்கி ஏ.ஐ தொழில்நுட்பம் தொடர்பான படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
சினிமா துறையில் பன்முக கலைஞனாக இத்தனை வேலைகளை செய்த உலகநாயகன், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி நேரடி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.