நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜின் பிறந்த தினமான இன்று அவரை பற்றிய ஒரு தொகுப்பு...
80ஸ் ரசிகர்களின் ஆதர்ச நாயகனான கே.பாக்யராஜ், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உதவியாளராக திரையுலகில் அறிமுகம் ஆனவர். உதவி இயக்குநர் மற்றும் கதாசிரியராக ஆரம்பித்த அவர், 16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள் என சிறு சிறு வேடங்களிலும் தலை காட்டினார்.
பாக்யராஜ் என்றதுமே முருங்கைக்காய் தான் நினைவுக்கு வரும். ஆனால், கிரைம் கதைகளிலும் அவர் கில்லாடி. சிவப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், ஒரு கைதியின் டைரி போன்ற திரில்லர் படங்களுக்கு கதை அவர்தான். ‘கன்னிப் பருவத்திலே‘, ‘விடியும் வரை காத்திரு‘ படங்களில் மிரட்டி இருப்பார்.
புதிய வார்ப்புகள், ஒரு கை ஓசை என வித்தியாசமாக துவங்கிய பாக்யராஜின் முதல் இயக்கமாக அமைந்தது ‘சுவரில்லாத சித்திரங்கள்‘ திரைப்படம். அதன்பிறகு நடிப்பு, இயக்கம், கதை என தொடர்ந்த அவருக்கென அக்மார்க் அடையாளமாக அமைந்த படம் ‘இன்று போய் நாளை வா...‘
அதன்பிறகு 1980களில் துவங்கி 1990கள் வரை தமிழ் திரையுலகில் பாக்யராஜின் ஆதிக்கம் நீடித்தது. முந்தானை முடிச்சு, துறல் நின்னு போச்சு, சின்னவீடு, ராசுக்குட்டி, இது நம்ம ஆளு, சுந்தர காண்டம், வீட்ல விசேஷங்க என அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் ரகங்கள்
இதில், இது நம்ம ஆளு திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளர் அவதாரமும் எடுத்தார், கே.பாக்யராஜ்..
திரையுலகில் திறமையான திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமை இவரையே சேரும். எம்ஜிஆர் நடித்து பாதியில் கைவிட்ட அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தின் காட்சிகளை மட்டும் எடுத்துக் கொண்டு புதிதாக கதை திரைக்கதை அமைத்து ‘அவசர போலீஸ் 100‘ என்ற படத்தை உருவாக்கி வெற்றி பெற்றதே அதற்கு சிறந்த உதாரணம். தனது கலை உலக வாரிசு என பாக்யராஜை எம்ஜிஆர் அறிவித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
2கே காலத்தில் வெளியான அவரது ‘வேட்டிய மடிச்சுக் கட்டு‘, ‘ஞானப்பழம்‘ போன்ற படங்கள் சரிவை சந்தித்த நிலையில், விஜயகாந்த் நடிப்பில் இயக்கிய ‘சொக்கத் தங்கம்‘ படமும் சரியாக கை கொடுக்கவில்லை.
அதன் பின்னர், சுமார் 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில் இருந்து சற்றே ஒதுங்கினாலும் கூட, முருங்கைக்காய், சின்னவீடு என்ற வார்த்தைகளும் அவரது அக்மார்க் காமெடிகளும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவை..