கை, கால் செயலிழந்து உதவி கேட்டு கெஞ்சும் பிரபல காமெடி நடிகர் -வறுமையின் கோரம்..கண் கலங்கவைத்த வீடியோ

Update: 2024-06-26 03:21 GMT

கை, கால் செயலிழந்து உதவி கேட்டு கெஞ்சும் பிரபல காமெடி நடிகர் -வறுமையின் கோரம்..கண் கலங்கவைத்த வீடியோ

நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த துணை நடிகர் வெங்கல்ராவ், கை, கால்கள் செயலிழந்து வீட்டில் முடங்கி கிடக்கும் சோகத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

தமிழ்த் திரைத்துறையில் நகைச்சுவை ஜாம்பவனாக வலம் வரும் வடிவேலுவால் பல சிறிய நடிகர்களுக்கு திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதேநேரம் வடிவேலுவின் சினிமா பயணத்தில் சின்ன பிரேக் விழுந்த போது அவரை சார்ந்த பலருக்கும் வாய்ப்புகள் கைநழுவிப்போயின..

அதில் ஒருவர் தான் ஆந்திராவை சேர்ந்த வெங்கல் ராவ்...

வடிவேலுவுடன் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்த வெங்கல்ராவ், முதன் முதலில் திரையுலகில் ஃபைட் மாஸ்டராக என்ட்ரி கொடுத்தவர்.

சுமார் 25 வருடமாக ஃபைட் மாஸ்டராக இருந்த வெங்கல்ராவ், நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்டோருடன் சண்டை காட்சிகளில் நடித்தவர்.

பின்னர் சண்டை காட்சி ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் இருந்து மீண்ட பின்பு, ஃபைட் மாஸ்டராக பணிபுரிய உடல் ஒத்துழைக்காததால், நடிப்பு பக்கம் திரும்பினார்...

தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்ச, ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தார்..

தமிழ் சினிமாவில் சாதிக்க முடியுமா தயக்கம் காட்டிய அவருக்கு, வடிவேலுவே வாய்ப்பை தந்திருக்கிறார்..

சுந்தர் சி யின் தலைநகரம் படத்தில் நாய் சேகராக நடித்த வடிவேலுவுடன், காமெடி காட்சிகளில் நடித்து கலக்கியிருப்பார் வெங்கல்ராவ்..

தலையிலிருந்து கையை எடுத்த உடன் கழுத்தை கடித்து வைக்கும் காமெடி சீன் இன்றளவும் டிரெண்டிங்கில் உள்ளது..

இதுமட்டுமா, கந்தசாமி படத்தில் தேங்காய் விலைக்கு பேரம் பேசும் வடிவேலு, வெங்கல் ராவின் காமெடி காட்சி...பக்கா மீம் கண்டென்ட்....

இப்படி வடிவேலு வெங்கல்ராவ் காம்போவில் பல காமெடிகள் ஹிட் அடித்துள்ளது...

இதற்கிடையில், வடிவேலு நடிக்காமல் போன போது, வெங்கல் ராவ்-ன் கெரியரும் அதல பாதாளத்திற்கு சென்றது...

இந்நிலையில் வடிவேலு கம்பேக் கொடுத்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் வெங்கல்ராவ் நடித்திருப்பார்...

இதன் பின், நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த அவருக்கு, குடும்பச் சுமையும் கூடிக்கொண்டே போனது...

ஏற்கனவே வறுமையில் குடும்பம் இருந்த நிலையில், சிறு வயதிலேயே அவரது மகனும் இறந்து விட்டார்.. பின்னர் தன் மகளை வளர்த்து ஆளாக்கியவர், பேரன், பேத்திகளையும் பார்த்து கொள்ளும் நிலை வந்தது...

மற்றொரு புறம், சோற்றுக்கே கஷ்டப்படும் நிலையும் ஏற்பட்டதாக பல நேர்காணல்களில் கூறி கண்ணீர் விட்டிருக்கிறார் வெங்கல்ராவ்..

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு சிறுநீரக கோளாறு காரணமாக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்..

இதன் பின் அவரின் நிலை குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில், தன் உடல்நிலை குறித்து உருக்கத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார் வெங்கல்ராவ்.

அதில், தனக்கு கை, கால் செயலிழந்து விட்டதாகவும், சிகிச்சை எடுக்கக்கூட பணமில்லை எனவும் வேதனையுடன் தெரிவிக்கும் அவர் திரைத்துறையினரின் உதவியை நாடியுள்ளார்.

ஏற்கனவே இதே போல் போண்டாமணியின் நிலைமை கவலைக்கிடமாகி உதவி கிடைத்திருந்தது..

இதே போல், திரையில் பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்த வெங்கல்ராவுக்கு, உதவி கிடைக்குமா ? என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்... ரசிகர்களை சிரிக்க வைத்த ஒரு கலைஞன் இப்போது கண்ணீரோடு கையேந்தி நிற்கிறார்.. நிச்சயம் இவருக்கு உதவிக்கரங்கள் நீள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்...


Tags:    

மேலும் செய்திகள்