புதுச்சேரியில், கார் சர்வீஸ் சென்டர் ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் 4 பேர் கடலூர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.கிருமாம்பாக்கம் அடுத்த ஈச்சன்காடு பகுதியைச் சேர்ந்த சிவானந்தம், கார் சர்வீஸ் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், வீட்டிற்கு மதிய உணவிற்காக சென்ற போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் குற்றவாளிகள் தப்பியோடிய நிலையில், தகவலறிந்த சீனியர் எஸ்பி ஸ்வாதிசிங், கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சிவானந்தத்துக்கும், கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள மதலபட்டு கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கும் 6 மாதத்திற்கு முன்பே கோயில் திருவிழா தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்தது, தெரியவந்துள்ளது. இதனால், மகேந்திரன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலைத் திட்டத்தை அரங்கேற்றியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், மகேந்திரன், ஆகாஷ், ரஞ்சித், கார்த்திக் ஆகிய நான்கு பேரும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், கடலூர் புதுநகர் சென்று 4 பேரையும் அழைத்து வந்து தனி இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.