அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் - டெல்லியில் இருந்து கிடைத்த பிரத்யேக தகவல்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை தேசிய மகளிர் ஆணையம் முன்னெடுக்கும் என்று அந்த ஆணையத்தின் தலைவர் விஜயா கிஷோர் ரஹத்கர் கூறியுள்ளார்.டெல்லியில் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவம், பெரும் துரதிஷ்டவசமானது மட்டுமின்றி வெட்கக்கேடான விஷயமும் கூட என்று தெரிவித்தார். நடந்த சம்பவத்தில் உண்மையை அறிவதற்காக, தேசிய மகளிர் ஆணையம் இரு நபர்கள் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து, அந்த குழு பாதிக்கப்பட்ட பெண் உட்பட பல்வேறு தரப்பினரை நேரில் சந்தித்தும், அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சென்று ஆய்வு நடத்தியும் விசாரித்துள்ளது என்றும் அவர் கூறினார். உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை வெகு விரைவில் கிடைக்கும் என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பரிந்துரைப்போம் என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேசிய மகளிர் ஆணையம் முன்னெடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.