கேரளாவை உலுக்கிய நரபலி சம்பவத்தில், கைது செய்யப்பட்ட மந்திரவாதி முகம்மது ஷபி மீது இதுவரை 8 வழக்குகள் காவல்நிலையத்தில் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. யார் இந்த முகம்மது ஷபி? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
கேரளாவைச் சேர்ந்த மருத்துவ தம்பதியான பகவந்த் - லைலா குடும்பத்தினர், தங்களது வீட்டில் செல்வம் செழிக்க வேண்டி பேராசைப்பட்டதன் விளைவு, 2 பெண்கள் துடிதுடிக்க நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த சம்பவம், கேரளாவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சமூகவலைதளத்தில் தன்னை மாய மந்தீரிக வித்தகனாக சித்தரித்துக் காட்டிய முகம்மது ஷபி, இடைத்தரகராக இருந்து, மருத்துவ தம்பதியான பகவந்த் மற்றும் லைலா ஆகியோருடன் கூட்டு சேர்ந்து இந்த அரக்க செயலை செய்துள்ளனர்.
யார் இந்த முகமது ஷபி என விசாரித்தால்... அவரைப் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
75 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது என முகம்மது ஷபியின் மீது 8 வழக்குகள் காவல்நிலையங்களில் பதிவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றான, கடந்த 2020ம் ஆண்டு புதன்குறிச்சி காவல்நிலையத்தில் பதிவான வழக்குதான் இது.
நினைவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஓமனா என்ற பெண் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது 75 வயது மூதாட்டியை, ஓமனாவின் மகன்களான முகம்மது ஷபி மற்றும் மனோஜ் ஆகியோர், பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும், இருவரும் சேர்ந்து, மூதாட்டின் மார்பு பகுதி மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளனர். பின்னர் ஓமனா, மூதாட்டியை அழைத்துச் சென்று விட்டுள்ளார். மூதாட்டியின் உடலில் ரத்தம் வருவதை பார்த்த அவரது மகன், உடனடியாக அருகில் உ்ளள மருத்துவமனையில் அனுமதித்தபோது, உடலில் கத்தியால் கீரிய காயங்கள் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதைக் கண்ட மூதாட்டியின் மகன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், முகம்மது ஷபியை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் அடைக்கப்பட்ட முகம்மது ஷபி, ஓராண்டு சிறைவாசத்திற்குப் பின் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், கொச்சி நகரில், பல சட்டவிரோத செயல்களில் இடைத்தரகராக முகம்மது ஷபி செயல்பட்டு வந்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில், பெரும் பணம் கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது. நரபலி கொடுப்பதற்காக பத்மா என்பவரை ஒப்படைக்க, முகம்மது ஷபிக்கு முதல் தவணையாக ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. அதே சமயம், நரபலி கொடுக்கப்பட்ட மற்றொரு பெண்ணான ரோஸ்லியை அழைத்து வர, எவ்வளவு பணம் கைமாறியுள்ளது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
ஸ்ரீதேவி என்ற பெயரில் போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி, அதில் தன்னை மருத்துவர் என்றும், மாயவித்தகன் என்றும் உயர்த்திக் காட்டியுள்ளார் முகம்மது ஷபி. இதன் மூலமாகவே, பகவந்த் சிங்கை சந்தித்து, அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்தி, இந்த கொடூரமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் முகம்மது ஷபி. ஸ்ரீதேவி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலி முகநூல் பக்கத்தை அழித்துவிட்டதால், அதில் உள்ள விவரங்களை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.