பிரிட்டனின் பிரதமர் பதவி யாருக்கு..? "இறுதி வரை போராடுவேன்" - ரிஷி சுனக் உறுதி
பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமாக செய்த பின்னர், பிரிட்டனின் புதிய பிரதமர் யார்...? என்ற எதிர்பார்ப்பு உலக அளவில் எழுந்திருக்கிறது.
அதிலும் இந்தியாவில் மிக அதிகமாக இருக்கிறது இந்த எதிர்ப்பார்ப்பு... ஏனென்றால் போட்டியில் இந்திய வம்சாவளி எம்.பியான ரிஷி சுனக் கவனம் பெற்றிருப்பதுதான். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ரிஷி சுனக் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அதற்கான தேர்தல்தான் தற்போது கன்சர்வேட்டிவ் கட்சியில் நடந்து வருகிறது.
இதில் கன்சா்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் வாக்களிக்கும் சுற்றுகளில் நாக் அவுட் முறையில் 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், இப்போது ரிஷி சுனக்கும், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு மந்திரி லிஸ் டிரசும் போட்டியில் உள்ளனர்.
இறுதிச்சுற்றில் போட்டியிடும் இருவரில் ஒருவரை கட்சியின் சுமாா் 2 லட்சம் உறுப்பினா்கள் தபால் மூலம் வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்கள். அவரே கட்சி தலைவராகவும் பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவாா். ஆதரவை திரட்டும் பிரசாரத்திற்கு மத்தியில், ரிஷி சுனக்கிற்கும், லிஸ் டிரசுக்கும் இடையே கடுமையான விவாதமும் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் ரிஷி சுனக்கை லிஸ் டிரஸ் தோற்கடித் திருப்பதாக கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களின் கணக் கெடுப்பு காட்டுகிறது.
ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக கன்சர்வேட்டிவ் கட்சியை ஆதரித்த வாக்காளர்களிடம் அதிக ஆதரவை பெற்றிருக்கிறார் ரிஷி சுனக்...
இதற்கிடையே ரிஷி நன்றாக பிரச்சாரம் செய்கிறார்; ஆனால் லிஸ் டிரஸ் சிறப்பாக செயல்படுவார் என எம்.பி.க்கள் எண்ணுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கிடையே தோற்பது உறுதியென்றாலும், கடைசி வரையில் போராடுவேன் என பிரசாரத்தில் தீவிரம் காட்டுகிறார் ரிஷி சுனக்...
பிரிட்டனின் புதிய பிரதமராக தோந்தெடுக்கப்படுபவரின் பெயா் வரும் செப்டம்பா் மாதம் 5 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கன்சா்வேட்டிவ் கட்சியின் தேர்தலை நடத்தும் 1922 குழு அறிவித்துள்ளது. இதுவரையிலான போட்டிகளில் வென்ற ரிஷி, சாதிப்பாரா? என்பதை அதுவரையில் பொறுத்திருந்து பார்க்கலாம்...