போதையில் தங்கையை தாக்கிய மாமா...தட்டி கேட்ட மைத்துனர் குத்தி கொலை...

Update: 2023-07-26 00:30 GMT

திருவண்ணாமலை மாவட்டம் மணலூர்பேட்டை சாலையில் உள்ளது நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான குடியிருப்பு வாரியம். நடந்து முடிந்த கொலை வெறி தாக்குதலால், அடுக்கு மாடி குடியிருப்பு மொத்தமும், பீதியில் வீட்டுக்குள் அடைந்திருந்தது. வயிற்றிலும் வாயிலும் அடித்து கொண்ட உறவினர்கள், தன்னிலை மறந்து தரையில் விழ காரணம், அன்று நடந்த களேபரம். ஒரு குடும்பமே தாக்கப்பட்டது மட்டுமின்றி, ஒரு உயிரும் பறிக்கப்பட்டிருக்கிறது. கொல்லப்பட்டவர் பரணி. துப்புரவு தொழிளாலராக வேலை பார்த்து வந்திருக்கிறார். சம்பவம் நடந்த அன்று பரணியின் குடும்பம் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.படுகாயமடைந்த பரணியின் தாய் தந்தையும், சகோதரிகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கிறார்கள். நடந்த மொத்த பயங்கரத்துக்கு காரணம், பரணியின் தங்கையை திருமணம் செய்து கொண்ட ராம்ஜி.

பரணி வசித்து வந்த அதே குடியிருப்பு பகுதியில் தான் ராம்ஜீயும் வசித்து வந்திருக்கிறார். கூலி தொழிலாளியான ராம்ஜிக்கும் பரணியின் தங்கை சுகுணாவுக்கும் திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். ராம்ஜி கஞ்சா போதைக்கு அடிமையானவர். திருமணம் முடிந்து குடும்பம் குழந்தைகள் ஆன பிறகு அந்த பழக்கம் தொடர்ந்திருக்கிறது. பொறுப்பில்லாமல் போதை நண்பர்களோடு சேர்ந்து கஞ்சா புகைத்து கொண்டு, ஊரில் அட்ராசிட்டி செய்து வந்திருக்கிறார். ராம்ஜியின் கஞ்சா பழக்கத்தால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு வெடித்திருக்கிறது. சம்பவம் நடந்த அன்று தலைகேறிய போதையில், வீடு வந்த ராம்ஜி மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதனை தொடர்ந்து சுகுணாவுக்கு அடி உதை விழுந்திருக்கிறது. தங்கையின் அழுகுரல் கேட்டதும் பரணியின் மொத்த குடும்பமும், ராம்ஜி வீட்டின் முன் குவிந்திருக்கிறது.

கஞ்சா போதையில் அரக்கனாக மாறியிருந்த ராம்ஜியிடமிருந்து, சுகுணாவை காப்பாற்றும் முயற்சியில் மொத்த குடும்பமும் ஈடுபட்டிருக்கிறது. நடந்த இழுபறியில் ராம்ஜி சுகுணாவின் தாயையும் சகோதரியும் பலமாக தாக்கியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பரணி, ராம்ஜியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி இருக்கிறது.போதையில் தன்னிலை மாறந்த பரணி வீட்டில் இருந்த கத்தி எடுத்து மனைவியின் குடும்பத்தார் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தி இருக்கிறார். நடந்த தாக்குதலில் கத்தி குத்து பட்ட பரணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ராம்ஜியை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். அழகான ஒரு குடும்பத்தை ராம்ஜியின் கஞ்சா போதை சுக்கு நூறாக உடைத்து போட்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்