"1st மார்க் எடுத்ததுக்கு அப்பா அம்மாவை ஸ்கூல்ல வர சொல்லுவாங்க..3 பேரும் போயிட்டாங்களே.." - கதறும் இளைய மகள்... கோர விபத்து-நொடியில் சிதைந்த குடும்பம்

Update: 2023-06-08 07:30 GMT

சேலத்தில், சாலை விபத்தில் தாய், தந்தை மற்றும் சகோதரியை பறிகொடுத்து தவிக்கும் இளம்பெண், குடும்பத்தை இழந்து தனியாக தவிப்பதால், தமிழக அரசு படிக்க உதவி புரிய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இதனை விரிவாக பார்ப்போம்...

ஒரே நொடியில் சிதைந்து போன குடும்பம்... கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன 3 உயிர்கள்... சேலத்தில் அரங்கேறிய சோக சம்பவம் இது...

சேலம் கல்பாரப்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் தனது மனைவி மாரியம்மாள், மகள் பூங்கொடி ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில், உத்தமசோழபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார். பின்னர், அங்கிருந்து வீடு திரும்பிய 3 பேரும், ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர்.

உத்தமசோழபுரம் தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார், கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில், 3 பேரும் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர்.

இந்த கோர விபத்தைக் கண்டு, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

மாரியம்மாளும், அவரது மகள் பூங்கொடியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த வெங்கடாச்சலம், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவரும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த கனவும் ஒரு கணத்தில் கலைந்ததுபோல ஆக்கியது இந்த கோர விபத்து...

விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தாய், தந்தை, அக்கா என 3 பேரையும் இழந்து, சொல்லொண்ணா துயரத்தில் உள்ள இளைய மகள் அமுதா, தன்னை தனியாக தவிக்க விட்டு பெற்றோர் சென்றதாக கண்ணீருடன் கூறியது வேதனை அளித்தது.

அரசு வேலையில் சேர்ந்து, ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே பெற்றோரின் கடைசி ஆசையாக இருந்ததாகவும், உயிரிழந்த பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற, தன்னை படிக்க வைக்க அரசு உதவவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

"எங்க அப்பா அம்மாவுக்கு 2 பெண் குழந்தைகள்"

"குடும்பத்துல பசங்கள போல வளரணும்னு சொன்னாங்க"

"11, 12வதுல பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தேன்"

"நல்லா படிச்சு பெரிய ஆளா ஆகணும்னு பெற்றோருக்கு ஆசை"

"பச்சை இங்க்ல கையெழுத்து போடணும்னு அப்பா சொல்வாரு"

"இப்போ அப்பா, அம்மா இல்லாத அனாதையா ஆகிட்டேன்"

"சின்னதுல இருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்தோம்"

"நான் படிக்க உதவி செய்யுங்க"

தாய், தந்தையை இழந்து தவிக்கும் இளம்பெண்ணிற்கு, அரசு உதவிட வேண்டும் என்பதே, உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்