வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்.. கழுத்தறுக்கப்பட்ட நிலையில் தாய், குழந்தைகள்

Update: 2023-04-20 14:35 GMT

கள்ளக்குறிச்சி அருகே பூட்டப்பட்ட வீட்டினுள் 11 வயது குழந்தை மற்றும் 8 மாத கைக்குழந்தையுடன் தாயும் சேர்த்து கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அதிர்ச்சி கொடுத்த இந்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு....

பூட்டப்பட்ட வீட்டினுள் இருந்து துர்நாற்றம்... அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார்... சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்க்கையில் அரங்கேறியிருந்த கோர சம்பவம் பகுதி மக்களை உலுக்கியுள்ளது....

சினிமாவின் கொடூர க்ரைம் காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு பெண் ஒருவரும், அவரின் 11 வயது மற்றும் 8 மாத கைக்குழந்தை கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்....

அறை முழுவதும் ரத்தம் தெறித்த காட்சிகளையும், தடயங்களையும் கண்ட போலீசார்... வீட்டை நோட்டமிட்ட போது மேலும் சில காட்சிகள் அவர்களை அதிர்ச்சியடைய செய்தது...

கிட்டதட்ட 10 கோழிகளும், அதன் குஞ்சுகளும் நீரில் மூழ்கடித்து கொல்லப்பட்டும், வீட்டில் வளர்த்து வந்த கன்றுக்குட்டி கத்தியால் குத்தப்பட்டு கிடந்ததையும் கண்டு அதிர்ந்து போயினர்...

யார் கொலையாளிகள் ? எதற்காக இந்த வெறி ? என போலீசார் நடத்திய விசாரணை பல பரபரப்புகளை வெளிக் கொண்டு வந்திருக்கிறது...

கள்ளக்குறிச்சி அருகே நரிமேடு காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன். இவர் மினி லாரியில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு ஊர் ஊராக வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், 11 வயதில் தமிழரசன் என்ற மகனும் இருந்த நிலையில், வளர்மதி மீண்டும் கர்ப்பம் தரித்து 6 மாதமாக கர்ப்பிணியாக இருந்துள்ளார்...

இந்நிலையில், எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் சிக்கி மணிகண்டன் உயிரிழக்கவே உடைந்து போனார் வளர்மதி.. 11 வயதில் ஒரு குழந்தையுடனும், வயிற்றில் சிசுவையும் சுமந்து கொண்டு செய்வதறியாமல் தவித்திருக்கிறார் அவர்..

கணவன் இறந்த சில மாதங்கள் கழித்து வளர்மதிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது... 11 வயது குழந்தை தமிழரசனுடன் சேர்த்து, கைக்குழந்தையான கேசவனையும் தனி ஆளாக வளர்த்து வந்திருக்கிறார் அவர்...

கணவன் விட்டு சென்ற காய்கறி வியாபாரத்தை கையிலெடுத்து அவர், ஓட்டுநர் ஒருவரை நியமித்து ஊர் ஊராக காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார்...

இந்நிலையில், திடீரென வளர்மதியின் வீடு நீண்ட நேரம் பூட்டியபடியே இருந்ததாலும், வீட்டினுள் இருந்து துர்நாற்றம் வந்ததாலும் அக்கம்பக்கத்தினர் போலீசில் புகாரளித்தனர்..

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, வளர்மதியும், 11 வயது குழந்தை தமிழரசனுடன் சேர்ந்து 8 மாத கைக்குழந்தை கேசவனும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் போலீசார் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது...

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள பாலக்கொல்லை தான் வளர்மதியின் கணவர் மணிகண்டனுக்கு சொந்த ஊர்...

அங்கு அவர் முதலில் பானுமதி என்பவரை திருமணம் செய்து கொண்டு வசித்து வந்திருக்கிறார்...

இதில் அவருக்கு குழந்தைகளும் உள்ள நிலையில், இரண்டாவதாக தான் தனது உறவுக்கார பெண்ணான வளர்மதியை திருமணம் செய்திருக்கிறார்..

இந்நிலையில், பிழைப்புக்காக கள்ளக்குறிச்சி வந்த இடத்தில் தான் சாலை விபத்தில் மணிகண்டன் உயிரிழந்தது போலீசாருக்கு தெரியவந்தது...

இது ஒரு பக்கம் இருக்கையில், கணவன் உயிரிழந்த பிறகு வளர்மதியின் தங்கையான வனிதாவுக்கும், அவருடைய கணவரான ரஜினிகுமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது...

அந்த தகராறே வளர்மதி தற்போது வசித்து வந்த வீட்டை வைத்து சொத்து தகராரறு தான் என்றதொரு தகவல் போலீசாரை சந்தேகிக்க வைத்தது...

இது ஒரு புறம் இருந்தால் ட்விஸ்டாக வளர்மதியின் காய்கறி வாகனத்தின் ஓட்டுநர் கடைசி சில நாட்களாக பணிக்கு வராதது போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது...

இப்படி எல்லா தகவலையும் சேகரித்து கொண்ட போலீசார், 7 தனிப்படைகளை அமைத்த நிலையில், வளர்மதியின் தங்கை மற்றும் அவரது கணவரிடம் விசாரணை நடத்த சென்னைக்கு ஒரு குழுவும், மணிகண்டனின் முதல் மனைவியிடம் விசாரணை நடத்த ஒரு குழுவும் விரைந்துள்ளது....

11 வயது குழந்தை, 8 மாதக் கைக்குழந்தையுடன் தாயை சேர்த்து கழுத்தறுத்து கொல்லும் அளவிற்கு அப்படி என்ன விரோதம் ?... கொலையாளிகள் யார் ? என்ற கேள்விகளுக்கெல்லாம் போலீசாரின் விசாரணையில் பதில் தெரியவரும்....

Tags:    

மேலும் செய்திகள்