விஸ்வரூபம் எடுத்திருக்கும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் கடந்து வந்துள்ள பாதையை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
ஜனவரி 18 2023... போராட்டத்தின் ஆரம்பப் புள்ளி.... மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், வினேஷ் போஹத், பஜ்ரங் புனியா ஆகியோர் மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஜனவரி 19... மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரை அவரது இல்லத்தில் மல்யுத்த வீரர்கள் சந்தித்துப் பேசினர். அன்றைய தினமே சக மல்யுத்த வீரர்கள் போராட்டத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டினர்.
ஜனவரி 20.... இந்த விவகாரம் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவிற்கு மல்யுத்த வீரர்கள் கடிதம் எழுதினர். மல்யுத்த சம்மேளனத்தை கலைத்து, விசாரணைக் கமிட்டி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஜனவரி 21... அமைச்சர் அனுராக் தாகூரை மல்யுத்த வீரர்கள் மீண்டும் சந்தித்தனர். மல்யுத்த சம்மேளனத்தின் செயல்பாடுகள் அன்றைய தினேமே நிறுத்தப்பட்ட நிலையில், குற்றச்சாட்டுகளை மறுத்து, மல்யுத்த சம்மேளனம் விளையாட்டு அமைச்சகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
ஜனவரி 23.... குத்துச்சண்டை ஜாம்பவான் மேரிகோம் தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விசாரணையை முடிக்க 4 வார காலம் அவகாசமும் அளிக்கப்பட்டது.
ஜனவரி 27... மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போஹத் ஆகிய இருவரும் குரோஷியாவில் நடைபெற்ற சர்வதேச மல்யுத்த தொடரில் இருந்து விலகினர்.
ஜனவரி 31... விசாரணைக் குழுவில் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் இடம் பெற்றதற்கு மல்யுத்த வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, 6வது நபராக குழுவில் மல்யுத்த வீராங்கனை பபிதா போஹத் சேர்க்கப்பட்டார்.
பிப்ரவரி 9... மல்யுத்த வீரர்களின் புகார்களை மேரி கோம் தலைமையிலான விசாரணைக் குழு விசாரிக்க ஆரம்பித்தது.
பிப்ரவரி 20... 2வது முறையாக விசாரணை நடைபெற்ற நிலையில், சாக்ஷி மாலிக், வினேஷ் போஹத் உள்ளிட்டோர் எகிப்தில் நடைபெற்ற மல்யுத்த தொடரில் இருந்து விலகினர்.
பிப்ரவரி 23... விசாரணைக் குழு, பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு சம்மன் அனுப்பியது. விசாரணைக்கான அவகாசத்தை மேலும் 2 வாரத்துக்கு விளையாட்டு அமைச்சகம் நீட்டித்தது.
ஏப்ரல் 16... விசாரணை அறிக்கையை விளையாட்டு அமைச்சகத்திடம் மேரி கோம் குழு சமர்ப்பித்தது. மே 7ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மல்யுத்த சம்மேளனம் அறிவித்தது. மறுபடியும் தான் போட்டியிட மாட்டேன் என பிரிஜ் பூஷண் கூறினார்.
ஏப்ரல் 23.... மீண்டும் ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் புகாருக்கு டெல்லி போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை என குற்றம்சாட்டினர்.
ஏப்ரல் 24... மே 7ம் தேதி தேர்தல் நடத்த முடியாது என்றும், 45 நாட்களில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் பி.டி.உஷாவிற்கு மல்யுத்த சம்மேளனம் உத்தரவிட்டது.
ஏப்ரல் 25... உச்சநீதிமன்றத்தை மல்யுத்த வீரர்கள் நாடினர். டெல்லி போலீசாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
ஏப்ரல் 28.... போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளில் பிரிஜ் பூஷண் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏப்ரல் 29 முதல் மே 1 வரை... காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மல்யுத்த வீரர்களை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர்.
மே 3... போராடிய மல்யுத்த வீரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நள்ளிரவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மே 7... விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றார்.
மே 11... கைகளில் கருப்பு பட்டை அணிந்து ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மே 23... ஜந்தர் மந்தர் போராட்டம் ஒரு மாதம் கடந்ததை அடுத்து, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டக்காரர்கள் இந்தியா கேட் வரை பேரணியாக சென்றனர்.
மே 28... புதிய நாடாளுமன்றத்தை நோக்கி நீதி கேட்டு பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். குண்டுக்கட்டாக அவர்கள் கைது செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மே 29... மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அதிகரித்தது.
மே 30... தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர். பதக்கங்களை கங்கையில் வீச வந்த வீரர்களை தடுத்து நிறுத்திய விவசாய சங்கத் தலைவர்கள், பிரச்சினைக்கு தீர்வு காணப்பட 5 நாட்கள் அவகாசம் கோரினர்.
மே 31... தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கத் தயார் என பிரிஜ் பூஷண் சிங் கூறினார். நீதிமன்ற தண்டனையை ஏற்கத் தயார் என்றும் அவர் அறிவித்தார்.
சர்வதேச மல்யுத்த சம்மேளனம், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உள்ளிட்டவை இந்த விவகாரம் விசாரிக்கப்படும் விதத்திற்கு அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், 5 மாதங்களைக் கடந்து 6வது மாதத்திற்கு சென்றிருக்கும் இப்பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதுதான் எஞ்சி நிற்கும் கேள்வி....