தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, நீட் தேர்வு தோல்வி பயத்தால், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் புத்தகங்களை கீழே கொட்டி பெற்றோர் கதறி அழும் காட்சி வேதனை அடைய வைத்துள்ளது.
சங்கரன்கோவில் அருகே உள்ள குலசேகரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற மாணவி, கடந்த 2 முறை தோல்வி அடைந்த நிலையில், 3வது முறையாக நீட் தேர்வு எழுதியுள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் வரும் 7ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், அதன் வினாத்தாள் விடை வெளியாகியது.
விடைத்தாளை பார்த்ததில் இருந்து ராஜலட்சுமி சோகமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தேர்வில் இந்த முறையும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற எண்ணத்தில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜலட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர், மகள் தூக்கில் தொங்கியதைக் கண்டு கதறி அழுதனர்.
தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, மகளை பறிகொடுத்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவமனை வளாகத்தில், மாணவி படித்த நீட் தேர்வு புத்தகங்களை கீழே கொட்டி கதறி அழுத காட்சி காண்போரை வேதனை அடைய வைத்தது.