திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இளைஞர் மது பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர், மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் கோயமுத்தூரில் பெயிண்டராக பணிபுரிந்து வந்த நிலையில், அங்கு உமாராணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், உமாராணிக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 மகள்கள் உள்ள நிலையில், கணவர் உயிரிழந்ததால் கோயமுத்தூரில் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கணவன் மனைவிபோல் ஒன்றாக வசித்து வந்த இருவருக்குமிடையே, திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கோபித்துக் கொண்டு சென்ற உமாராணியை அழைத்துவர, அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் தேவநாயக்கன் பட்டிக்கு கணேசன் சென்றுள்ளார். அங்கும், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், உமாரானியின் உறவினரான காளிதாஸ் கணேசனை அழைத்து கொண்டு மதுபானக்கடைக்கு சென்றாத கூறப்படுகிறது. அங்கு வைத்து கணேசனை காளிதாஸ் தாக்கிய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த உமாராணி இருவரையும் சமாதானம் செய்து வைக்க முயன்றிருக்கிறார். அப்போது, கையிலிருந்த மதுபாட்டிலால் காளிதாஸின் கழுத்தில் கணேசன் குத்திய நிலையில், காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பியோடிய கணேசனை தேடி வருகின்றனர்.