லஞ்சமாக தாலி கொடுத்த விவகாரம்.. சப்-கலெக்டர் செய்த காரியத்தால் தாசில்தாருக்கு நேர்ந்த நிலை - வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
செய்யாறு சார் ஆட்சியரை கண்டித்து கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர், தனது தந்தையின் இறப்பு சான்றிதழ் கேட்டு, தாலியை கையூட்டாக கொடுத்த வீடியோ வெளியானது. இதையடுத்து, துணை வட்டாட்சியர் வெங்கடேசனை சஸ்பெண்ட் செய்து சார் ஆட்சியராக உள்ள அனாமிகா உத்தரவிட்டார். ஆனால், அவரது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர், சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை ஊழியலர்கள் மீது விரோத போக்கை கடைபிடித்து வருவதாக கண்டன முழக்கங்களை எழுப்பினர். சார் ஆட்சியர் முறையாக அலுவலகம் வருவதில்லை என்று குற்றம் சாட்டிய வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர், இறப்பு சான்றிதழ் கேட்டது தொடர்பான கோப்பு ஒரு ஆண்டுக்கு முன்பே சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டதாக கூறினார். ஆனால், கோப்பில் கையெழுத்திடாமல் சார் ஆட்சியர் காலம் தாழ்த்தியதாகவும், பழியை துணை வட்டாட்சியர் மீது சுமத்திவிட்டதாகவும் புகார் தெரிவித்தார்.