ஜல்லிக்கட்டில் கண் கிழிந்து, இறந்து போன இளைஞன்...குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்தவர் மறைவு
குடும்பத்தின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்த குளித்தலை இளைஞர், ஜல்லிக்கட்டு மாடு முட்டி உயிரிழந்ததால், அந்த வட்டாரமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
தைப்பொங்கலை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ஏறுதழுவுதல் என பல பெயர்களில், தமிழ்நாடு முழுவதும் வீரசாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
உழவர் திருநாளன்று கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஆர்.டி. மலை பகுதியிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இதில், தோகைமலை ஒன்றியம், பள்ளப்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் சிவக்குமாரும் கலந்துகொண்டார்.
நான்காம் ஆண்டாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில், 5 சுற்றுகளில் 787 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
362 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.
அவர்களில் 25 பேர், பார்வையாளர்கள்18 பேர், காளை உரிமையாளர்கள் 16 பேர் என 59 பேர் மாடுமுட்டியதில் காயமடைந்தனர்.
எழுபத்தேழாவது டோக்கன் பெற்று, களமிறங்கிய சிவக்குமார், இரண்டாம் சுற்று முடியப்போகும் நிலையில், சோர்வடைந்தார்.
தடுப்பு வேலியை ஒட்டி ஒரு மூலையில் அமர்ந்து, இளைப்பாறிக் கொண்டிருந்த அவரை, பயங்கரமான வேகத்தில் பாய்ந்துவந்த காளை ஒன்று குத்தித் தூக்கியது.
அதில் சிவக்குமாருக்கு வலது கண் கடுமையாக பாதிக்கப்பட்டு, படுகாயம் அடைந்தார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி18ஆம் தேதியன்று உயிரிழந்தார்.
அன்று மாலையே சிவக்குமாரின் உடல், அவருடைய சொந்த ஊரில் தகனம்செய்யப்பட்டது.
இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருமே, வாய்விட்டு அழுத காட்சி, பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.
காரணம், சிவக்குமாரின் குடும்ப நிலைமைதான்!
இறந்துபோன சிவக்குமாரின் தந்தையும் தாயும் திருச்சி உணவகம் ஒன்றில், கூலி வேலை செய்து, வாழ்க்கையை நடத்திவருகின்றனர்