மன உளைச்சலில் கிணற்றில் குதித்த சிறுமி - காப்பாற்ற முயன்று அடுத்தடுத்து குதித்த மூவர்
ஒட்டன்சத்திரம் அருகே தற்கொலை செய்து கொள்வதற்காக கிணற்றில் குதித்த சிறுமியையும், அவரை காப்பாற்ற சென்று கிணற்றுக்குள் தத்தளித்த மூவரையும், தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் லெக்கயன்கோட்டையை சேர்ந்தவர்16 வயது சிறுமி தனலட்சுமி. இவர் குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது சவட முத்து, சுப்பிரமணி மற்றும் நவீன் என்ற மூவர், கிணற்றில் குதித்து சிறுமியை மீட்டுள்ளனர். ஆனால் கிணற்றுக்கு படிக்கட்டு இல்லாததால், நால்வரும் கிணற்றுக்குள்ளேயே 1 மணி நேரம் தத்தளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், கயிறு கட்டி நால்வரையும் பத்திரமாக மீட்டனர்.