கேரட் விலை வீழ்ச்சி அடைந்ததால், அவற்றை மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக கொடைக்கானல் பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலை சுற்றியுள்ள மலை கிராமங்களான மன்னவனூர், கவுஞ்சி, கிளாவரை, பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கேரட் பயிர் செய்யப்படுகிறது. சாதகமான பருவநிலை காரணமாக மகசூல் அதிகரித்து காணப்பட்ட நிலையில், 1 கிலோ கேரட் 30 ரூபாய்க்கு விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது வெளிமாநிலங்களில் இருந்து தமிழக சந்தைகளுக்கு கேரட் வரத்து உயர்ந்துள்ளதால் 1 கிலோ கேரட் விலை 5 ரூபாயாக சரிவடைந்துள்ளது. இதனால் கேரட்டை மாடுகளுக்கு தீவனமாக போட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு சில விவசாயிகள் கேரட்டை அறுவடை செய்யாமல் அதனை அப்படியே உழுது உரமாக்கி வருகின்றனர்.