"தமிழகத்தையே மீளா துயரில் ஆழ்த்திய ஸ்ரீமதி இதோ வலிகள் தாங்கி உறங்குகிறாள்" - 1 வருடமாகியும் ஆறாத ரணம்.. கனக்க செய்யும் கல்லறை

Update: 2023-07-12 05:54 GMT

தமிழகத்தையே உலுக்கிய மாணவி ஸ்ரீமதி உயிரிழந்து முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது... அவரின் நினைவாக சொந்த ஊரில் நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டிருக்கும் நிலையில் ஸ்ரீமதியின் நினைவுகளை திரும்பி பார்க்க வைக்கிறது இந்த தொகுப்பு...

கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கம் - செல்வி தம்பதியின் மகள் ஸ்ரீமதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி, கடந்த ஆண்டு இதே நாளில் மர்மமான முறையில் உயிரிழந்தார்...

மாணவியின் இறப்பு குறித்து, பள்ளி தரப்பு உரிய விளக்கம் அளிக்கவில்லை என கூறி ஸ்ரீமதியின் உறவினர்கள் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, ஜூலை 16ஆம் தேதி வெளியான ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், உடலில் காயங்கள் இருப்பதாக தகவல் வெளியாகவே உறவினர்கள் கொந்தளிப்புக்கு ஆளாகினர்..

அதனைத் தொடர்ந்து, ஜூலை 17ஆம் தேதி கனியாமூர் பள்ளி வளாகத்தை சுற்றிலும் கடும் போராட்டம் மூண்டது. பேருந்துகள் எரிக்கப்பட்டன. வன்முறையை தடுக்க போராட்டக்காரர்கள் மீது போலீசாரின் தடியடி சம்பவங்களும் அரங்கேறின.

பதற்றத்தைக் குறைக்க, கனியாமூர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மாணவியின் மரணம் தொடர்பாக, 2 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜூலை 17ல் நடந்த கலவரம் தொடர்பாக, 430க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசாரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நின்ற நிலையில் 2ஆம் கட்ட பிரேத பரிசோதனை, ஜிப்மர் மருத்துவமனை குழுவின் அறிக்கை என பரபரப்பின் உச்சத்தில் இருந்தது ஸ்ரீமதியின் மரண விவகாரம்...

இதை தொடர்ந்து ஜூலை 23ம் தேதி உயிர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி, ஸ்ரீமதியின் உடலை பெற்று, அன்றே இறுதி சடங்கும் நடைபெற்றது. அப்போது அவர் விருப்பப்படி புத்தகத்தை சடலத்தின் மீது வைத்து உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர்..

அதனைத் தொடர்ந்து கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் கல்வி ஜூலை 27 முதல் தொடங்கப்பட்டது.

மறுசீரமைப்பு பணிகள் தொடங்கிய நிலையில், 145 நாட்களுக்கு பிறகு பள்ளி திறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டதை எதிர்த்து, மாணவியின் தாய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு, விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சிபிசிஐடி விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை என உயிரிழந்த மாணவியின் தாய் செல்வி, ஆரம்பம் முதலே குற்றம் சாட்டி வந்தார்.

அதன் பிறகு சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், ஆயிரத்து 154 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், வழக்கில் இருந்து ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதற்கு மாணவியின் தாய் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனைத் தொடர்ந்து குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அவரிடம் வழங்கப்பட்டன.

மாணவியின் மரணம் கடந்த ஒரு வருடமாக புதிராத புதிராகவே இருந்து வரும் நிலையில், மாணவியின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த சூழலில் சொந்த ஊரான பெரிய நெசலூரில் மகளின் நினைவாக நினைவு மண்டபம் ஒன்றை எழுப்பியிருக்கிறார் அவரின் தாய் செல்வி

மகளின் மரணத்துக்கு என்றாவது ஒரு நாள் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார் அவர்.. கடலூரை சேர்ந்த ஸ்ரீமதி, உயிரை விட்ட இடம் கள்ளக்குறிச்சியாக இருந்தாலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் மனதிலும் நீங்காமல் நினைவாகவே மாறிப்போயிருக்கிறார்...

Tags:    

மேலும் செய்திகள்