ராமேஸ்வரம் நவ 05. ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து இன்று சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
கச்சத்தீவிற்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மன்னார் கடற்படையினர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு விசைப்படகையும் அதிலிருந்து 15 மீனவர்களையும் விரட்டிச் சென்று நெடுந்தீவு அருகே சிறை பிடித்தனர்.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை தற்போது மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைக்கு பின் நாளை நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர் அதன் பின் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிய வருகிறது.
இந்நிலையில் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் இன்னும் தமிழகம் திரும்பாத நிலையில் ஏற்கனவே ராமேஸ்வரம் மீனவர்கள் ஒன்பது பேர் சிறையில் உள்ள நிலையில் மீண்டும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 15 பேர் சிறை பிடிக்கப்பட்டிருப்பது ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.