இரவில் லாரி ஓட்டுபவர்களுக்கு ஷாக்.. டீசல் வியாபாரிகளின் பகீர் செயல்.. திண்டுக்கல் - மதுரை சாலையில் அதிர்ச்சி
திண்டுக்கல் கொடைரோடு, திண்டுக்கல் - மதுரை தேசிய 4 வழிச்சாலையில் சாலையோரம் நிறுத்தப்படும் சரக்கு லாரிகளில் தொடர்ந்து டீசல் திருடப்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இரவு நேரங்களில் பழுது உட்பட பல்வேறு காரணங்களால், சாலையோரம் நிறுத்தப்படும் சரக்கு லாரி மற்றும் வேன்களில் அப்பகுதியை சேர்ந்த, டீசல் திருடும் மர்ம கும்பல் தொடர்ந்து டீசல் திருடி வருகின்றனர்.
ஒரு சில ஓட்டுநர்களின் அனுமதியுடனும் குறைந்த விலைக்கு டீசல் பிடிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
இதனை, வாங்கும் டீசல் வியாபாரிகள், அதில் மண்ணெண்ணெய் கலந்து, வேறு சில வாகனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்காக, நெடுஞ்சாலை ஓரங்களில், பஞ்சர் கடைகள் போல் செட் அமைத்து, சாலைகளில் செல்லும் வாகனங்களை சிக்னல் காட்டி அழைத்து டீசல் திருடி வருகின்றனர்.
இரவு நேரங்களில் சாலையோரம் ஓய்வுக்காக நிறுத்தப்படும் லாரிகளில், சிறிய மோட்டார்கள் மூலம் அதிவிரைவாக திருடும் டீசல் வியாபாரிகள், அதே பகுதியில் உள்ள இதர வாகனங்களுக்கு கலப்பட டீசலை 24மணி நேரமும் விற்பனை செய்து, அதிக லாபம் பார்க்கின்றனர்.
இதனால், இத்தொழிலை செய்வோர் எண்ணிக்கை, கொடைரோடு பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், இப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அச்சத்தில் உள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சரக்கு லாரிகளில் டீசல் திருடும் கும்பல் மீது, காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.