சென்னையில் பெய்துவரும் தொடர்மழையில், நகரின் பல பகுதிகளில் வடிகால்கள் சீரமைக்கப்பட்டுள்ளதால், வெள்ள நீர் எளிதாக வடிந்திருப்பதும் நடந்துள்ளது.
சிறு மழைக்கே தலைநகர் தத்தளிக்கும் என்பது கடந்த கால வரலாறாக இருந்துவரும் நிலையில், தற்போது மேற்கொள்ளப் பட்டு வரும் வடிகால் பணிகள் காரணமாக, பல இடங்களில் வெள்ளநீர் எளிதாக வடிந்துவருவதைப் பார்க்கமுடிகிறது.
குறிப்பாக வடகிழக்குப் பருவமழையின்போது, வழக்கம்போல கடந்த ஆண்டும், தியாகராயர் நகர், கலைஞர் கருணாநிதி நகர், வேப்பேரி போன்ற பகுதிகளில் சிறு மழைக்கே வெள்ள நீர் தேங்கி நின்றுவிட்டது. சாலையிலும் வெள்ளநீர் வெளியேறுவதற்குள் பகுதி மக்கள் பட்டபாடு, சொல்லிமாளாது!
இந்த நிலையில், இந்த ஆண்டு பருவமழை தொடங்கி, நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. தியாகராயர் நகரில் மேற்கொள்ளப்பட்ட வடிகால் சீரமைப்புப் பணிகளால் இன்று காலையில் பல சாலைகளில் வெள்ளம் எளிதாக வடிந்ததைப் பார்க்கமுடிந்தது.
கே.கே நகர் பகுதியிலும் வேப்பேரி ஜோதிவெங்கடேஸ்வரா சாலையிலும் கூட இந்த வருடம் மழை நீர் விரைவிலேயே வடிந்துவிட்டது.
இதே போல தி.நகர் திருமலை சாலை, ஜிஎன் செட்டி சாலை என சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது வெள்ள நீர் சீக்கிரமே வடிந்துள்ளதாக பகுதி மக்கள் பாராட்டுகின்றனர்.