சிதறிய தோட்டாக்கள்.. நொடியில் சல்லடையான 'கேங்க்ஸ்டர்' உடல்..! போலீஸ் கண்முன்னே அரங்கேறிய கொடூரம் - மொத்த காவல்துறையும் அதிர வைத்த கும்பல்

Update: 2023-07-14 02:35 GMT

ராஜஸ்தானில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட ரவுடியை, போலீசாரின் கண்முன்னே மர்மகும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

சினிமா பட பாணியில், மின்னல் வேகத்தில் அரங்கேறிய அதிர வைக்கும் கொலை சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.

ரவுடி கும்பலின் தலைவனான குல்தீப் மற்றும் அவரது அடியாள் விஜய்பால் ஆகியோர் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டனர்.

இதற்காக இந்த இருவரையும் பாரத்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, போலீசார் பயணிகள் பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளனர்

நீதிமன்றம் செல்லும் வழியில், பாரத்பூரில் உள்ள சுங்கச்சாவடியில் பேருந்து நின்று கொண்டிருந்தபோது, மின்னல் வேகத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், திபுதிபுவென பேருந்தில் ஏறி, போலீசாரின் கண்களில் மிளகாய் பொடி தூவி அதிர்ச்சி அளித்தது.

அதன் பிறகு ரவுடிகளின் தலைவனான குல்தீப்பை நோக்கி, தோட்டாக்கள் தீரும் வரை துப்பாக்கியால் அந்தக் கும்பல் கண்மூடித்தனமாக சுட்டது. இதில் குல்தீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது அடியாள் விஜய்பால் படுகாயமடைந்தார்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, பேருந்தில் இருந்த பயணிகள் உயிரை கையில் பிடித்தபடி அலறி துடித்தனர். இந்த தாக்குதலின் போது பயணிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஒரு சில விநாடிகளில் நினைத்ததை நடத்திவிட்டு, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், ராஜஸ்தான் காவல்துறை வட்டாரத்தில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரத்தை உணர்ந்து, சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டதுடன், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் சோதனை செய்தனர்.

அதன் அடிப்படையில், சம்பவம் நடைபெற்ற ஒரு மணி நேரத்திற்குள், கொலையாளிகளில் 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குற்றவாளிகளின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை எனவும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், ரவுடி கும்பலைச் சேர்ந்த இருதரப்பிற்கும் இடையே, பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, எதிர்தரப்பை சேர்ந்த நபரை கொலை செய்த சம்பவத்தில், பழிவாங்கும் விதமாக, குல்தீப் மற்றும் விஜய்பாலை குறிவைத்து இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட குல்தீப் மீது 16 வழக்குகளும், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜய்பால் மீது 15 வழக்குகளும் காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்