இவர்களுக்கு மட்டும் தானா மகளிருக்கான ரூ.1000? - வெளியான புதிய பரபரப்பு தகவல்
திமுக-வின் பல கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகள், பல தேர்தல்களின் கதாநாயகனாகவே இருந்துள்ளது. அந்த அளவிற்கு தேர்தல் களத்தில் அவை தாக்கத்தை எற்படுத்தும். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, 501 வாக்குறுதிகளை கொடுத்திருந்தது திமுக. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் போன்றவை அதில் அடக்கம்.
தேர்தல் முடிந்து ஆட்சியமைத்ததும், எப்போது இந்த வாக்குறுதிகள் நிறைவேறும் என்ற பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்துவந்தன. எதிர்கட்சிகளும் தங்கள் பங்குக்கு உரிமைத் தொகை தொடர்பாக கண்டன குரல்களை எழுப்பத் தொடங்கின..... ஈரோடு இடைத்தேர்தலின் போது, எதிர்கட்சிகளின் பிரச்சாரத்தில் உரிமைத் தொகை விவாகரம் பிரதானமாக இடம்பெற்றது.
இந்த நிலையில்தான் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், அதற்காக 7000 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி, அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கூடவே ஒரு சிக்கலும் எழுந்தது. அன்றைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "தகுதியான பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை" என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தார். வாக்குறுதியில் எல்லா பெண்களுக்கும் உரிமைத் தொகை வழங்குவதாக கூறிவிட்டு தற்போது தகுதியுடையவர்களுக்கு மட்டும் என்று கூறுகிறார்களே என்ற சர்ச்சை எழுந்தது. அது மட்டுமில்லாமல், யார் யார் இதில் பலனடைவார்கள் என்ற குழப்பமும் ஏற்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்த குழப்பத்தை தீர்க்க சட்டசபையில் விளக்க உரை கொடுக்க வேண்டியதானது....
நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியும் மகளிர் என பல்வேறு வகைகளில் தங்களது விலை மதிப்பில்லா உழைப்பை வழங்கி வரும் 1 கோடி பெண்கள் 'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தால் பயன்பெறுவார்கள் என விளக்கம் கொடுக்கப்பட்டது. இதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என கூறியிருந்த நிலையில், அதற்கான ஆலோசனைகள் தற்போது நடந்துள்ளன.உரிமைத் தொகையை வழங்க ஆண்டு வருமானம், வயது வரம்புகள், ரேஷன் கார்டு ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு அதன்படி ஒரு பட்டியலை தயார் செய்ய உள்ளதாகவும், இதற்காக ஆன்லைனில் விண்ணபிக்க வழி செய்வது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணா பிறந்த நாளுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், பயனாளர்கள் வடிகட்டப்படுவார்களா? பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 7000 ஆயிரம்போடி ரூபாய் நிதி போதுமானதாக இருக்கமா ? என்ற விவரமெல்லாம் கூடிய விரைவில் வெளியாகும்....