ரூ.2,438 கோடி... மலைக்க வைக்கும் மோசடி... அதிரடியாக பறந்த ரெட் கார்னர் நோட்டீஸ் - அடுத்தடுத்த கட்டத்தில் 'ஆருத்ரா'

Update: 2023-04-22 10:28 GMT

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில், மேலும் 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். முதலீட்டார்களிடம் பெற்ற பணத்திற்கான ஆவணங்கள் அடங்கிய 90 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ள சம்பவத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம், 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவத்தின் வழக்கை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட மைக்கேல் ராஜ், பாஜக நிர்வாகி ஹரிஷ் உட்பட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் கைதுக்குப் பின், கிடைக்கப் பெற்ற தகவல்களைக் கொண்டு, போலீசாரின் விசாரணை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த விவகாரத்தில், மோசடியில் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர், துபாய் நாட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர்களை பிடிக்க ரெட்கார்னர் மற்றும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கைதானவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பாஜக பிரமுகர்கள் உட்பட பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்களை, பொருளாதார குற்றவியல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் போலீசாருக்கு வலு சேர்க்கும் விதமாக, மோசடியில் ஈடுபட்ட மேலும் 2 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் ஒருவரான ராஜா செந்தாமரை என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனரும், பாஜக நிர்வாகியுமான ஹரிஷிடம் கூடுதல் இயக்குனராக செயல்பட்டு வந்ததும், மற்றொரு நபரான சந்திர கண்ணன், ஆருத்ரா நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் வெப்சைட் பணிகளை கையாண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், தரகர் சந்திர கண்ணன் முதலீட்டாளர்களிடம் இருந்து வசூலித்த பணத்திற்கான ஆவணங்களை, 90 மூட்டைகளில் அடைத்து, அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மறைத்து வைத்திருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் அந்த 90 மூட்டைகளையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் ராஜா செந்தாமரை மற்றும் சந்திர கண்ணன் என 2 பேரும் பொதுமக்களிடம் இருந்து 56 கோடி ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. இவர்களுக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி கணக்குகளை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர்.

அதன் பின்னர் கைது செய்யப்பட்ட ராஜா செந்தாமரை மற்றும் சந்திர கண்ணன் ஆகியோரை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே. சுரேஷூக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், அந்த சம்மனை ரத்து செய்யக்கோரி, ஆர்.கே. சுரேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் அரசியல் வழிவாங்கும் நடவடிக்கையாக, இந்த விவகாரத்தில் தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக, காவல்துறையினர் பதிலளிக்கும் வரை, சம்மனுக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி, விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ஆருத்ரா விவகாரம் வேகமெடுத்திருக்கும் நிலையில் இதன் பின்னணியில் உள்ள ஒவ்வொருவரும் வெளிச்சத்திற்கு வரப்போகிறார்கள் என்பதை அடுத்தடுத்து கைது சம்பவங்கள் உணர்த்திக் கொண்டு இருக்கிறது..

Tags:    

மேலும் செய்திகள்