சிவகாசியில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்ட பத்ரகாளி அம்மன் கோயிலில் பரிகார பூஜை செய்யப்பட்டது.
சிவகாசியில் புகழ்பெற்ற பத்ரகாளி அம்மன் கோயிலில், கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, கடந்த சில மாதங்களாக திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, கடந்த 20-ஆம் தேதி, திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு வந்தவர்கள், பட்டாசு வெடித்ததில், 110 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில், வண்ணம் தீட்டுவதற்காக கட்டப்பட்டிருந்த சாரங்கள், கீற்றுகள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.
இந்த விபத்து, சிவகாசி நகர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகம் நடத்தப்பட்டு, கோயிலின் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, பரிகார பூஜை செய்யப்பட்டது.
பின்னர், மீட்பு பணிகளுக்கு உதவியாக இருந்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சஞ்சலம் நீங்கியதால் எப்போதும்போல் சிவகாசி மக்கள், பத்ரகாளி அம்மனை வழிபடலாம் என்று சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.