சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி ரெய்டு.. விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல் - ரூ.2000 கோடிக்கு NO கணக்கு - சிக்கலில் அதிகாரிகள் - "அடுத்து நடக்க போவது இதுதான்"
சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கணக்கு காட்டப்படாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை அலசுகிறது இந்த தொகுப்பு...
சார்பதிவாளர் அலுவலகத்தில் 30 லட்சம் ரூபாய்க்கு மேலாக பணப்பரிவர்த்தனை உள்ள பத்திரப்பதிவுகளை முறையாக கணக்கு காட்டப்பட வேண்டும் என்பது வருமான வரித்துறை விதி...
கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள், சமர்ப்பித்த நிதி பரிவர்த்தனை அறிக்கையில் ஏராளமான வித்தியாசங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
அதனை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, தமிழகத்தில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் பாதிக்கு மேல் முறையான கணக்கு காட்டப்படவில்லை என்பது வருமான வரித்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், 270 சார் பதிவாளர் அலுவலகங்கள் முறையாக நிதி பரிவர்த்தனை அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதில் குறிப்பிடும்படியாக, திருச்சி உறையூர் மற்றும் சென்னை செங்குன்றம் ஆகிய 2 சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தபோது, கணக்கில் காட்டப்படாமல் பல கோடிக்கணக்கான ரூபாய் பண பரிவர்த்தனைகள் நடந்திருப்பது தெரியவந்தது.
இதனை அடிப்படையாக வைத்து, திருச்சி உறையூர் மற்றும் சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த 2 அலுவலகங்களிலும் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான பணப்பரிவர்த்தனை குறித்து கணக்கில் காட்டப்படாமல் இருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும், திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் பணம் கணக்கில் வரவில்லை என்பதையும் வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், பான் மற்றும் ஆதார் இல்லாமலேயே 30 லட்சம் ரூபாய்க்கு மேல் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, 36 மாவட்ட பதிவாளர்களை மாற்றி, பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா உத்தரவிட்டுள்ளார்.
2 சார்பதிவாளர் அலுவலகங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை கணக்கில் காட்டப்படவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள சார் பதிவாளர்களும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்..