உலகம் முழுக்க பிரார்த்தனை... ஒரு நாய்க்காக களமிறங்கிய ராணுவம்..! 40 நாள், 4 குழந்தைகளை காத்த 'வில்சன்' எங்கே..?
அமேசான் காட்டில் நடந்த விமான விபத்தில் 40 நாட்களுக்கு பிறகு குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அவர்களை மீட்க உதவிய நாய் வில்சன், அமேசான் காட்டில் தொலைந்து போயிருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
ஒரு விமான விபத்தில் சிக்கி, 40 நாட்கள் அமேசான் அடர்காடுகளில் தொலைந்து போன நான்கு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதை, உலகம் கொண்டாடி வரும் வேளையில், அந்த குழந்தைகளை மீட்க உதவிய மோப்ப நாய் ஒன்று அதே அமேசான் காடுகளில் தொலைந்து போயிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தொலைந்துபோன குழந்தைகள் காட்டுக்குள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கான தடயங்களைக் கண்டறிய மிகவும் உதவியாக இருந்தது, ஆறு வயதான இந்த பெல்ஜியன் ஷெபர்ட் வகை நாய் 'வில்சன்' தான்.
அதோடு, குழந்தைகளுக்கு பாதுகாப்பாக சில நாட்கள் வில்சன் அவர்களுடனே பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.
வில்சன் செடிகளுக்கு நடுவே ஒரு பிங்க் நிற ஃபீடிங்க் பாட்டிலைக் கண்டுபிடித்த போதுதான் குழந்தைகள் உயிருடன் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையே மீட்பு குழுவினருக்கு பிறந்திருந்தது.
தற்போது குழந்தைகளின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் நாயின் கால் தடங்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அதோடு, குழந்தைகளும் தங்களுடன் நாய் ஒன்று சில காலம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
தங்களுடன் இருந்த நாய் குறித்து குழந்தைகள் ஓவியம் வரைந்து காட்டியதன் மூலம் அது 'வில்சன்' தான் என்பதை உறுதி செய்துள்ளனர், ராணுவத்தினர்.
யாரையும் கைவிடுவதில்லை' என்னும் கொள்கையின்படி, மீட்புப் படையினரில் ஒருவர் தொலைந்து போயிருந்தால் எப்படித் தேடுதல் வேட்டை நடக்குமோ, அதேபோல வில்சனையும் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர், கொலம்பியா ராணுவத்தினர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வில்சன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
நான்கு குழந்தைகளின் உயிரை பத்திரமாக மீட்க அந்த வாயில்லா ஜீவனுக்காக நாமும் பிரார்த்தனை செய்வோம்...