சபரிமலை பொன்னம்பலமேட்டில் திடீர் பூஜை... தடையை மீறிய முன்னால் ஊழியர் தலைமறைவு...

Update: 2023-05-18 11:42 GMT

பொன்னம்பலமேட்டில் திடீர் பூஜை. இந்த காணொளி தான் இன்று கேரளாவையே பதற வைத்திருக்கிறது. யாருக்கும் அனுமதி இல்லாத மலையில் நுழைந்து மர்மமான திடீர் பூஜையை செய்து வீடியோ போட்டது யார்...?

கேரளா என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது சரிபமலை அய்யப்பன் தான்.... கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, 48 நாள் உளமாற விரதம் இருந்து, தை முதல் நாள் அன்று மகரஜோதி வழியே அய்யனை காண்பதற்கு, நாடெங்கும் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு படையெடுத்து வருவார்கள். 

அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த மகரஜோதியை ஏற்றும் இடம் தான் சபரிமலை சன்னிதானத்திற்கு அருகே உள்ள இந்த பொன்னம்பல மேடு. கேரள வனத்துறையால் பாதுகாக்கப்படும் இந்த இடத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. வருடத்திற்கு ஒரு முறை மட்டும் ஜோதியை ஏற்றுவதற்கு இங்கே வருவார்கள். அப்படிப்பட்ட புனிதமான இந்த இடத்தில் இருந்து சிலர் பூஜை செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.இந்த வீடியோ தொடர்பாக வனத்துறையினர் விசாரனை நடத்திய போது தான் சென்னையை சேர்ந்த நாரயணசுவாமி என்பவர் தலைமையில் 8 பேர் கொண்ட கும்பல் மலைக்கு சென்று பூஜை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.

நாராயணசுவாமி வேறு யாருமல்ல....கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சபரிமலை சன்னிதானம் கீழ்சாந்தியில் உதவியாளாரக பணிபுரிந்து வந்தவர்.கோவிலுக்கு பூஜை செய்ய வரும் பக்தர்களுக்கு போலி ரசீது கொடுத்து பண மோசடி செய்ததாக இவர் மீது புகார் இருக்கிறது.இந்நிலையில் தான் கடந்த 8 ஆம் தேதி நாராயணசுவாமி தனது நண்பர்களுடன் குமுளியிலிருந்து வல்லகடவுக்கு ஜீப்பில் சென்றிருக்கிறார்கள். அப்போது வழியில் இருந்த பொன்னம்பல மேட்டிற்கு செல்லலாம் என்று திட்டம் போட்டிருக்கிறார்கள்.

இதற்காக பாதுகாப்பு பணியில் இருந்த வன வளர்ச்சி கழக ஊழியர்கள் ராஜேந்திரன்கருப்பையா , சாபு ஆகிய இருவருக்கும் மூவாயிரம் ரூபாய் பணம் கொடுத்து சரிகட்டி விட்டு வனப்பகுதிக்குள் சென்று பூஜை செய்தது உறுதியானது. விசாரனையின் முடிவில் பணம் வாங்கி கொண்டு வெளியாட்களை மலைக்கு அனுப்பிய இரண்டு ஊழியர்களையும் வனத்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மேலும் தடை செய்யப்பட்ட புனிதமான இடத்திற்கு அனுமதி இன்றி சென்ற நாராயணசுவாமி உள்ளிட்ட 9 பேர் மீதும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்த தகவல் அறிந்து தலைமறைவாக உள்ள நாராயணசுவாமி அன்ட் கோவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.இவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்