மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவன்- புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்த போலீசார்
சேலத்தில், பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவன், போதை ஊசி போட்டு உயிரிழந்ததாக எழுந்த புகாரால், புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த கிரி என்ற மாணவர் ப்ளஸ் டூ தேர்வு எழுதியிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதனையடுத்து உறவினர்கள் மணியனூர் இடுகாட்டில் உடலை அடக்கம் செய்தனர். இதனிடையே, உயிரிழந்த கிரி, போதை ஊசி செலுத்தியதால் தான் இறந்து போனதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக உயிரிழந்த கிரியின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் சந்தேக வழக்காக பதிவு செய்தனர். மேலும், உடலை தோண்டி எடுத்து விசாரிக்க, தாசில்தாரிடம் பெற்றோர் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, தாசில்தார் முன்னிலையில், இடுகாட்டில் இருந்த மாணவரின் உடல் தோண்டி எடுத்து, அந்த இடத்திலே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அதே இடத்தில் உடல் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே, மாணவரின் மரணத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர்.