சென்னை புளியந்தோப்பு பகுதியில், மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி 21 சவரன் நகைகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி துளசி வீட்டிற்கு வந்த 3 பேர், அவருக்கு அறிமுகமான பெண் தங்களை அனுப்பியதாக கூறி பேச்சுக் கொடுத்துள்ளனர். பின்னர், மூவரும் புறப்பட்டு சென்றதும், பீரோவிலிருந்த நகை, பணம் மாயமாகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மூதாட்டி துளசி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சிராஜ் அகமது, ராயப்பேட்டையைச் சேர்ந்த ஆசாம் மொய்தீன், பார்டர் தோட்டத்தை சேர்ந்த சையது இக்ராம் அகமது ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21 சவரன் நகைகள் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.