போலி பத்திரம் மூலம் பட்டா மோசடி.. தீக்குளிக்க முயன்ற பெண்கள் - வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
திண்டுக்கல்லில் போலி பத்திரம் மூலம் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண்கள் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த சலேத் நாதன் என்பவர் கடந்த 2003 ஆம் ஆண்டு நிலம் ஒன்றை விலைக்கு வாங்கி அதில் சிறியதாக வீடு கட்டி வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சலேத்நாதன் இறந்து விட்டார். இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த அஸ்ரப்நிஷா என்பவர், சலேத் நாதனின் நிலத்திற்கு போலியாக பத்திரம் செய்து, அதனை வைத்து கடந்த 2017ஆம் ஆண்டு போலி பட்டா வாங்கியதாக தெரிகிறது.
இது தொடர்பாக சலேத்நாதனின் மனைவி ரோணிக்கம், திண்டுக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் செய்ததுடன் தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தர வேண்டும் என முறையாக விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த ரோணிக்கம் மற்றும் அவரது மகள் நதியா வட்டாட்சியர் அலுவலகத்தில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அப்போது அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.