"உலகெங்கும் மேவிய முருகப்பெருமானே"... முருகனின் மூன்றாம் படை வீட்டில் கும்பாபிஷேகம் - பழனியில் குவிந்த முருக பக்தர்கள்

Update: 2023-01-27 04:50 GMT

 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேகம் விழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது.

கோவில் மலை மேல் உள்ள ராஜகோபுரம் தங்க விமானம் மற்றும் மேற்புறத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு குடமுழக்கு பெருவிழா காலை 8 மணி முதல் 9 மணிக்குள் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தில் எட்டாவது கால யாகசாலை பூஜை காலை நான்கு மணிக்கு தொடங்குகிறது.

150 சிவாச்சாரியார்கள் யாகசாலை பகுதியில அமைக்கப்பட்டுள்ள 83 வேள்வி குண்டங்களில் வேத மந்திரம் முழங்க வேள்விகளை நடத்துகின்றனர் 108 ஓதுவார்கள் திருமுறை திருப்புகழ் பாடுகின்றனர்.

கும்பாபிஷேக விழாவை நேரில் பார்ப்பதற்கு முன்பதிவு செய்தவர்களில் தேர்வு செய்யப்பட்ட 2000 பேர் மற்றும் முக்கிய விருந்தினர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏறத்தாழ 6000 பேர் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேரடியாக கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளனர் .

முக்கிய விருந்தினர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் பொதுமக்கள் அமர்வதற்கு 25 டிற்கும் மேற்பட்ட தனித்தனியே பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அனுமதி டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.

எட்டாவது காலையாக பூஜை முடிந்த பின்னர் கோவில் கோபுரங்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களாலும் பக்தர்கள் மற்றும் அறநிலை துறை சார்பில் கொண்டுவர பட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களில் கடம் புறப்பாடு நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து கோவில் விமானங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை பூஜைகள் நடத்தப்பட உள்ளது .

புனித நீர் கோபுர கலசங்களில் போற்றப்பட்ட பிறகு ஹெலிகாப்டர் மூலம் கோவில் கோபுரங்கள் மலைப்பகுதிகளில் முழுவதும் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை பதிவு பெறாத பொதுமக்கள் பார்ப்பதற்கு கிரிவலப் பாதை மற்றும் பேருந்து நிலையம் நகரின் முக்கிய பகுதிகளில் led திரை வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பழனி நகராட்சி, கோவில் நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் இணைந்து அடிப்படை வசதிகளை செய்துள்ளது.

அனுமதி பெற்ற பொதுமக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள மலை மேல் வருவதற்கு படிப்பாதையை பயன்படுத்த கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் வந்து செல்ல ரோப் கார் மற்றும் மின் இழுவையில் பயன்படுத்தப்படும். வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.

லட்சக்கணக்கான பொதுமக்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கலந்து கொள்வார்கள் என்பதால் பழனி நகருக்குள் புறநகர் பேருந்துகள் தனியார் புறநகர் பேருந்துகள் நகருக்குள் வர அனுமதி இல்லை. இதற்காக பழனி தாராபுரம் கோயம்புத்தூர் சாலை சந்திப்பில் 12 ஏக்கர் பரப்பளவில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய விருந்தினர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் வாகனங்கள் நிறுத்த கோவில் வாகனம் நிறுத்த பகுதிகள் பயன்படுத்தப்பட உள்ளது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது .

ஒரு தென் மண்டல காவல் கண்காணிப்பாளர்ஆறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் 10 கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர்கள் 20 துணை காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நகரின் முக்கிய பகுதிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மலைக்கோவில் கோவில் பிரகாரங்கள் கிரிவல பாதை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 7 கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது 50க்கும் மேற்பட்ட காவல் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளது.

100க்கும் மேற்பட்ட சீருடை அணியாத போலீசார் பொதுமக்களோடு பொதுமக்களாக கலந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் நவீன பறக்கும் கேமராக்கள் உதவியுடன் சந்தேகப்படும் நபர்களை கண்காணிக்க எட்டு பறக்கும் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அருள்மிகு தண்டாயுதபாணியின் நவபாசனம் மூலவர் சிலை புனித நீரால் பூஜிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு பிறகு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளது.

பொதுமக்கள் அதிக அளவில் சுவாமி தரிசனம் செய்வார்கள் என்பதால் மலைக்கு மேலே வருவதற்கு யானை பாதையும் கீழே இறங்குவதற்கு படிப்பாதையையும் பயன்படுத்த கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு அறிவித்துள்ளது.

மேலும் கும்பாபிஷேத்தை காணவும் தைப்பூசம் தொடங்க உள்ளதால் பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் கும்பாபிசேகம் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்