ஆஸி.க்கு சாதகமாக அமைந்த மேகமூட்டம்.. விக்கெட் எடுக்காமல் திணறிய இந்தியா.. ஜடேஜாவிற்கும் ஆட்டம் காட்டிய ஆடுகளம்

Update: 2023-06-08 03:24 GMT

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியா முழு ஆதிக்கம் செலுத்தி உள்ளது. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.......


2வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்... இறுதிப்போட்டியில் இந்தியாவும்... ஆஸ்திரேலியாவும்... மேகமூட்டத்துடன் காணப்பட்ட ஓவல் மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங்கை தேர்வு செய்தார்.

எதிர்பார்த்ததைப்போல் 4 ஸ்பீடு, ஒரு ஸ்பின்னர் என்ற காம்பினேஷனுடன் களமிறங்கிய இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த அஸ்வின் சேர்க்கப்படவில்லை... ஆடுகள சூழலைக் கருத்தில்கொண்டு அஸ்வினுக்கு இடமளிக்க முடியவில்லை என்றார் கேப்டன் ரோகித் சர்மா...

தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சை வார்னரும், கவாஜாவும் தொடங்க, முகமது ஷமியும், சிராஜும் மேகமூட்டத்தை சாதகமாகப் பயன்படுத்தி ஆரம்பக்கட்ட ஓவர்களில் மிரட்டினர். இதற்கு கைமேல் பலனாக, கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் சிராஜ் ஓவரில் வெளியேறினார்.

ஆனால் மேகமூட்டம் மெல்ல மெல்ல விலக, மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. உமேஷ் யாதவ் ஓவரில் டி20 மோடுக்கு சென்ற வார்னர், 4 ஃபோர்களை அடிக்க, லபுஷேன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஷர்துல் தாகூர் ஓவரில், லெக் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற பந்தை அடிக்க முயன்ற வார்னர், கே.எஸ். பரத்தின் அபாரமான டைவிங் கேட்ச்சால் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்த சில ஓவர்களில் லபுஷேனை தனது அற்புதமான பவுலிங்கால் கிளீன் போல்டாக்கினார் ஷமி...

76 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா லேசாக ஆட்டம் கண்டபோது, முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் - டிராவிஸ் ஹெட் ஜோடி கைகோர்த்தது. அதிரடியாக அடுத்தடுத்து ஃபோர்களை ஹெட் அடிக்க, அவருக்கு உறுதுணையாக ஆடினார் ஸ்மித்....

ஹெட்டின் பவுண்டரி மழையால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அடுத்தடுத்த செஷன்களும் ஆஸ்திரேலியா வசமானது. ஒருநாள் போட்டியைப்போல ஆடிய ஹெட், சதம் விளாசி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மறுபுறம் நங்கூரம் பாய்ச்சிய ஸ்மித், அரைசதம் கடந்தார்.

இந்த ஜோடியைப் பிரிக்க இந்திய பவுலர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. உமேஷ் மற்றும் ஷர்துல் தாகூரின் பவுலிங் எடுபடவில்லை... ஜடேஜாவிற்கும் ஆடுகளம் ஒத்துழைக்கவில்லை...

4வது விக்கெட்டுக்கு ஸ்மித்-ஹெட் ஜோடி 251 ரன்கள் சேர்த்த நிலையில், முதல் நாள் ஆட்ட முடிவில், முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 327 ரன்கள் குவித்துள்ளது ஆஸ்திரேலியா..

ஹெட் 146 ரன்களுடனும் ஸ்மித் 95 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கும் 2ம் நாள் ஆட்டத்தின் முதல் செஷனிலேயே, இந்த ஜோடியைப் பிரித்தால்தான் இந்தப் போட்டிக்குள் இந்தியா திரும்பும்... இன்றும் விக்கெட்டுகளை வீழ்த்தாவிட்டால் இந்தியாவிற்கு மிகப்பெரும் சிக்கல்தான்...

Tags:    

மேலும் செய்திகள்