புதுச்சேரியில் தேர்தல்துறை மற்றும் ஆட்சியர் அலுலகங்களை ஜப்தி செய்ய உத்தரவு
நாடாளுமன்றத் தேர்தலுக்காக எடுக்கப்பட்ட வாகனங்களுக்கு வாடகை செலுத்தாததால் புதுச்சேரி மாநில தலைமை தேர்தல்துறை மற்றும் ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டப்பட்டது.புதுச்சேரியில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக, தலைமை தேர்தல் துறையானது 200 வாகனங்களை வாடகைக்கு எடுத்தது. முதலில் பாதி வாடகையை செலுத்திய தேர்தல்துறை, பின்னர் மீதி தொகையை தர பல நிபந்தனைகளை விதித்தது. இதற்கான ஆவனங்களை சமர்பித்தும் 80 லட்சம் ரூபாய் பாக்கி வைத்ததால், புதுச்சேரி நீதிமன்றத்தில் டிராவல்ஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரு அலுவகத்தையும் ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, ஆட்சியர் அலுவலகம் மற்றும் தேர்தல்துறை அலுவலக கட்டடங்களில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. வரும் 30ம் தேதி மறுவிசாரணையில் ஆஜராகி தேர்தல்துறை முடிவை தெரிவிக்காவிட்டால், அந்த கட்டடங்களை ஏலம் விட உத்தரவிடும் முழு அதிகாரமும் நீதிமன்றத்துக்கு உண்டு எனவும் கூறப்பட்டுள்ளது.