காந்தி கொலையில் கைதான சாவர்கரின் பிறந்த நாளில் நாடாளுமன்ற திறப்பு விழா..! கிளம்பும் சர்ச்சைகள்..யார் இந்த சாவர்கர்..?

Update: 2023-05-28 07:15 GMT

வீர சாவர்கர் பிறந்த நாள் அன்று புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நடத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாவர்கரின் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.


1883 மே 28ல், மகாராஷ்ட்ராவின் நாசிக் அருகே பாகுர் கிராமத்தில் பிறந்த விநாயக் தாமோதர் சாவர்கர், இளம் வயதிலேயே அரசியலில் ஆiர்வம் கொண்டிருந்தார். தனது சகோதரர்களுடன் இணைந்து அபிநவ் பாரத் சங்கம் என்ற ரகசிய இயக்கத்தை தொடங்கி, இந்திய விடுதலைக்கு போராடினார்.

பூனேவில் உள்ள பெர்கூசன் கல்லூரியில் உயர் கல்வி கற்ற போது, அங்கு பணியாற்றிய பால கங்காதர திலகரால் ஈர்க்கப்பட்டார். 1906ல் இங்கிலாந்து சென்று சட்டம் பயின்றார். அங்கு காந்தி, லெனின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்தித்தார். இந்திய விடுதலை போராட்டம் பற்றியும், ஆயுத போராட்டம் பற்றி பல நூல்களை எழுதினார்.

1910ல் லண்டனில் சாவர்கரை கைது செய்த ஆங்கிலேய அரசு, இந்தியாவிற்கு அனுப்பி, சிறையில் அடைத்தது. ஆங்கிலேய அதிகாரி ஒருவரின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும், பயங்கரவாத செயல்களில் ஈடுப்பட்டதாகவும்

அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அந்தமான் தீவில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு, கடும் சித்திரவதைகளை எதிர் கொண்டார். சிறைக் கொடுமைகள் பொறுக்க முடியாமல், தம்மை விடுதலை செய்யும்படி, ஆங்கிலேய அரசுக்கு மன்னிப்பு கடிதமும், விண்ணப்பங்களும் அனுப்பினார்.

1921ல் மகாராஷ்ட்ராவின் ரத்தனகிரி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட சாவர்கர், 1924ல் விடுவிக்கப்பட்டார். ஆனால் ரத்தனகிரி மாவட்டத்தை விட்டு வெளியேற 14 ஆண்டுக ளுக்கு தடை விதிக்கப்பட்டது.

சிறையில் இருந்த போது இந்துத்துவ கொள்கைகளின் அடிப்படை பற்றி ஒரு விரிவான நூலை எழுதினார். இரண்டாம் உலகப் போரின் போது, இந்து மகாசபாவின்

தலைவராக பதவியேற்று, இந்துத்துவ கொள்கைகளை பிரச்சாரம் செய்தார். காந்தி கொலையாளியான நாதுராம் கோட்சே இவரை சந்தித்து, இவரின் சீடரானார்.

1942ல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை எதிர்த்தார். பாகிஸ்தான் பிரிவினை தொடர்பாக ஜின்னாவுடன், காந்தி பேச்சு வார்த்தை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

சுதந்திரத்திற்கு பிறகு, காந்தி பாகிஸ்தானிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, அவரை கடுமையாக விமர்சித்தார்.

1948 ஜனவரியில், கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, சாவர்கர் கைது செய்யப்பட்டார். ஆனால் போதுமான சாட்சிகள் இல்லாத காரணத்தினால், பின்னர் விடுவிக்கப்பட்டார்.

1966ல் பூனாவில், தமது 82 வது வயதில் காலமானார்.

Tags:    

மேலும் செய்திகள்