"இவளால் என் வாழ்வு மாறும்"... 12 வருடம் சுமந்தே படிக்க வைத்த தாய்...அரசுக்கு வைத்த கோரிக்கை ...
12 வருடங்களாக மாற்றுத்திறனாளி மகளைத் தூக்கிச் சென்று படிக்க வைத்த குடியாத்தத்தைச் சேர்ந்த தாய், தன் மகளுக்கு குடியாத்தம் அரசு கல்லூரியிலே இடம் கிடைக்க அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் போடியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் எனும் கூலித் தொழிலாளிக்கு அனிதா என்ற மனைவியும் 4 பிள்ளைகளும் உள்ளனர். மூத்த மகள் கவுரி மணி பிறக்கும் போதே மாற்றுத்திறனாளி ஆவார். 12ம் வகுப்பு வரை கவுரியை அவரது தாய் தான் தூக்கிச் சென்று அரசு பேருந்தில் பயணம் செய்து அரசுப் பள்ளியில் படிக்க வைத்தார்... வகுப்பு முடியும் வரை பள்ளிக்கு வெளியிலேயே அமர்ந்திருக்கும் தாய் அனிதா, வகுப்பு முடிந்தவுடன் மாலையில் அதேபோல் மகளைத் தூக்கிக் கொண்டு தங்கள் கிராமத்திற்கு வந்தடைவார். இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் படித்த கவுரிமணி 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 425 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இவருக்கு வேலூரில் உள்ள அரசுக் கல்லூரியில் மட்டுமே இடம் கிடைத்துள்ளது. ஆனால் அங்கு செல்ல 3 பேருந்துகள் மாற வேண்டி இருக்கும். 12 ஆண்டுகள் பள்ளிக்கு தன்னை சுமந்து சென்ற தாய், இனியும் கஷ்டப்படக்கூடாது என்றெண்ணும் கவுரி, தனக்கு வேலூர் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தன் மகளின் கல்லூரி கனவை நனவாக்க அரசு உதவி புரியும் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார் அனிதா...