4 வயது மகளை பட்டினிபோட்டு கொன்ற தாய்... 2வது திருமணத்திற்கு தடையாக இருந்ததால் பயங்கரம்...
பெண் போலீசாரின் அரவணைப்பில் தலையில் முக்காடு போட்டு அழைத்து செல்லப்படும் இவர் தான் பத்து மாதம் சுமந்து பெற்ற ஒற்றை மகளின் உயிரையே காவு வாங்கிய அகோர தாய் இசக்கியம்மாள்.
4 வயது குழந்தையின் உயிரை பறிக்க காரணம் என்ன...? உண்மை அம்பலமானது எப்படி...?
இசக்கியம்மாளின் சொந்த ஊர் தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன் கோவில். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாடசாமி என்பவருடன் திருமணம் முடிந்திருக்கிறது. இந்த தம்பதிக்கு பிறந்த பெண்குழந்தை தான் கொல்லப்பட்ட மதுஷிகா.
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் மாடசாமி இறந்து போன நிலையில், வறுமை குடும்பத்தை வாட்டி வதைத்திருக்கிறது.
சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இசக்கியம்மாள் குழந்தையை வைத்துக்கொண்டு திண்டாடி வந்திருக்கிறார். இதனால் சங்கரன்கோவிலில் இருந்த வீட்டை காலி செய்து கொண்டு பெரும்பத்தூர் கிராமத்தில் வாடகை வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளார்.
குழந்தை அந்த பகுதியில் ஊள்ள உறவினர்களின் வீட்டில் விட்டு விட்டு அருகில் உள்ள மில்லுக்க வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி இருக்கிறார்.
இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உறவினர் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென மூச்சு பேச்சின்றி மயங்கி விழுந்திருக்கிறது.
உடனே அலறி அடித்து கொண்டு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கே சிகிச்சை பலனின்றி மதுஷிகா இறந்து போயிருக்கிறாள்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையின் சடலத்தை சோதனை செய்திருக்கிறார்கள். அப்போது மதுஷிகாவின் உடலில் இருந்த காயங்கள் போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது.
உடனே சடலத்தை உடற்கூராய்வு செய்ய பரித்துறைத்திருக்கிறார்கள். சில தினங்களில் வெளிவந்த ஆய்வு அறிக்கை நடந்திருப்பது கொலை என சான்றளித்திருக்கிறது.
அடுத்த நொடியே குழந்தையின் தாய் இசக்கியம்மாளை விசாரனை வலையத்திற்குள் கொண்டு வந்து கிடுக்கிப்பிடி விசாரனை நடத்தி இருக்கிறார்கள்.
அப்போது தான் நடந்த அனைத்து உண்மைகளும் அம்பலமாகி இருக்கிறது.ஆம்....இளம் வயதிலேயே கணவனை இழந்து விட்டதால், இசக்கியம்மாள் ஒரு துணையை தேடி இருக்கிறார். இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மற்ற பெண்களை போல சந்தோஷமாக வாழ நினைத்துள்ளார்.
ஆனால் அந்த ஆசைகள் எல்லாம் குழந்தை மதுஷிகாவால் நிராசையாக மாறி இருக்கிறது. குழந்தையை காரணம் காட்டி, உறவினர்கள் இசக்கியம்மாளின் இரண்டாவது திருமணத்திற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்கள்.
இதனால் கடுப்பாகி போன இசக்கியம்மாள் குழந்தையை தீர்த்து கட்ட திட்டம் தீட்டி இருக்கிறார். அன்று முதல் மதுஷிகாவுக்கு சாப்பாடு கொடுக்காமல், பட்டினி போட்டே சித்ர வதை செய்திருக்கிறார்.
போதாத குறைக்கு கோவம் வரும் போதெல்லாம் குழந்தையை கொடூரமாக அடித்து துன்புருத்தி உள்ளார். உள்ளே பசி உருக்குலைக்க, வெளியே காயங்கள் வலிகொடுக்க, மதுஷிதா துடிதுடித்து இறந்து போயிருக்கிறார்.
இந்த கொடூரத்தை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் குழந்தையை உறவினர் வீட்டில் விட்டு சென்றதும் விசாரனையில் தெரியவந்திருக்கிரது.
விசாரனை முடிவில் இசக்கியம்மாளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை வேளச்சேரியில் கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை தாயே ஏரியில் வீசிக்கொன்ற அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்த பயங்கரம் நடந்தேறிவிட்டது.