காலேஜ் பீஸ் கட்ட தற்கொலை செய்த தாய்..."நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்"
சேலம்
ஓடும் பேருந்தில் விழுந்து தாய் தற்கொலை…
கல்லூரிக்கு பணம் கட்டுவதற்காக விபரீத முடிவு…
காலேஜ் பீஸ் கட்ட தற்கொலை செய்த தாய்…
நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்...
பிள்ளைங்களோட எதிர்காலத்துக்காக பெத்தவங்க எந்த எல்லைக்கும் போவாங்க... சில சமயம் உயிரையும் கொடுக்க தயங்கமாட்டாங்கறது வெறும் டயலாக் இல்ல... எதார்த்தமான உண்மை... அதுக்கு உதாரணம்தான் இந்த சம்பவம்...
வியாபாரம் ஆகிவிட்ட கல்வியை விரல் நுனியால் கூட தொட முடியாத ஒரு ஏழைத் தாய் மகனின் படிப்பிற்காக தனது உயிரையே மாய்த்துக் கொள்ளும்
ஆனால் இந்த படம் வெளி வந்து வருடங்கள் பல கடந்து விட்டது, வாழ்க்கை தரம் உயர்ந்து விட்டது என நினைத்துக் கொண்டிருப்பவர்களின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது இந்த சிசிடிவி காட்சி..
தள்ளாடி நடந்து வந்த ஒரு பெண்மணி திடீரென சாலையில் வந்த பேருந்தின் முன் பாய்ந்திருக்கிறார்.. கன நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது.
விபத்து என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த ஒரு சம்பவத்தையும் அதன் கண்ணீர் நிறைந்த பின்ணணியையும் இந்த உலகத்திற்குச் சொன்ன சாட்சி இது..
சேலம் முள்ளுவாடிகேட் மறைமலைஅடிகள் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.
திருமணமாகி கணவரை பிரிந்த பாப்பாத்திக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள். இருவருமே கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
தனது தாய் மற்றும் பிள்ளைகளோடு வசித்து வந்த பாப்பாத்தியின் வேலை தான், மொத்த குடும்பத்திற்கும் வாழ்வாதாரமாக இருந்திருக்கிறது.
ஒப்பந்த ஊழியராக இருந்த பாப்பாத்திக்கு மாதம் 10 ஆயிரம் மட்டுமே ஊதியமாக கிடைத்திருக்கிறது. அதுவும் அனைத்து நாட்களிலும் வேலைக்குச் சென்றால் தான் முழு சம்பளமும் கைக்கு வரும்.
இல்லை என்பதை தவிற வேறேதும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்களை வறுமை வாட்டி வதைத்திருக்கிறது.
இந்த நிலையில் தான் பிள்ளைகள் இருவருக்கும் கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் திண்டாடி இருக்கிறார் பாப்பாத்தி.
அதோடு சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு,
வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தவர். சம்பவம் நடந்த அன்று காலை கோவிலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு வெளியே சென்றிருக்கிறார். அதன் பிறகு காவல் துறையில் இருந்து பாப்பாத்தி இறந்த செய்திதான் வீட்டிற்கு வந்திருக்கிறது.
ஆரம்பத்தில் இவர் விபத்தில் இறந்ததாக தான் வழக்குப்பதிவு செய்யபட்டிருக்கிறது. ஆனால் பேருந்து ஓட்டுனரும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், பாப்பத்தி தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தோடே சாலையில் சென்றதாக கூறி இருக்கிறார்கள்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்த போது தான், உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
சாலையில் நடந்து சென்ற பாபாப்பாத்தி திடீரென பேருந்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது உறுதியாகி இருக்கிறது.
இதனையடுத்து போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், பாப்பாத்தியின் தற்கொலைக்கான காரணம் வெளிச்சதுக்கு வந்திருக்கிறது.
விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு கொடுப்பார்கள் என்ற தகவல் எப்படியோ பாப்பாத்திக்கு தெரியவந்திருக்கிறது.
தானும் விபத்தில் இறந்துவிட்டால் அதன் மூலம் பிள்ளைகளுக்கு பணம் கிடைக்கும் என நினைத்திருக்கிறார்.
இதனால் சம்பவம் நடந்த அன்று கோவிலுக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற பாப்பாத்தி நேராக பேருந்தின் முன் பாய்ந்து இறந்து போயிருக்கிறார்.
எந்த குடும்பத்திற்காக பாப்பாத்தி உயிரை விட்டாரோ, அதே குடும்பம் இன்று அவரது மரணத்தால் அனாதையாக நிற்கிறது.