போக்குவரத்து சேவையில் நவீனத்துவம்..ஓட்டுநர் இல்லாத டாக்ஸி சேவை... லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக அறிமுகம்
உலகில் முதல்முறையாக அமெரிக்காவில் உள்ள மோர்கன் டவுன் நகரில், கடந்த 1975 ஆம் ஆண்டு அறிமுகமான போக்குவரத்து சேவை தான் இந்த 'பாட் டாக்ஸி' சேவை. ஓட்டுநர் இல்லாத டாக்ஸி சேவை... முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் வாகனம்... சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், அதிநவீன டாக்ஸி சேவையாக பார்க்கப்படுகிறது, இந்த 'பாட் டாக்ஸி'. உலக அளவில் வெறும் ஐந்து நிறுவனங்கள் மட்டுமே பாட் டாக்ஸி வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதுவும் தற்போது உலக அளவில் வெறும் எட்டு நாடுகளில் மட்டுமே இந்த டாக்ஸி சேவை நடைமுறையில் உள்ளது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிகளை அழைத்துச் செல்லும் இந்த டாக்ஸியில் ஒரே நேரத்தில் நான்கு முதல் ஆறு பேர் வரை பயணிக்கலாம். பாட் டாக்ஸிகள் பயணிக்க கம்பிகள் கொண்டு தனி வழிப்பாதை அமைக்கப்பட வேண்டும் என்ற நிலையில், சில நாடுகளில் அவை மேலே மெட்ரோவை போல் பயணிக்கும் விதத்திலும் அமைந்துள்ளன. பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ரோப்கார் சேவை இருக்கும் இந்த எலக்ட்ரிக் பாட் டாக்ஸி சேவை.
தற்போது லண்டன், அபுதாபி , சீனா தென் கொரியா போன்ற நாடுகளில் பாட் டாக்ஸி சேவை அமலில் உள்ள நிலையில் , இந்தியாவில் உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் அமைய இருக்கும் பாட் டாக்ஸி வழித்தடம் தான் உலகிலேயே நீளமானது என்று கூறப்படுகிறது. இப்படி லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக அறிமுகமாக இருக்கும் இந்த பாட் டாக்சி சேவை அடுத்த ஆண்டு முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும். நொய்டாவில் கட்டப்பட்டு வரும் இந்தியாவின் ஐந்தாவது சர்வதேச விமான நிலையமான ஜெவாரில் இருந்து நொய்டா வரை சுமார் 14.6 கிலோமீட்டர் நீளத்திற்கு பாட் டாக்ஸி வழித்தடம் அமைய இருக்கிறது.
இந்த வழிதடத்தில் சுமார் 12 நிறுத்தங்கள் இடம் பெற உள்ளன. இதில் நிறுத்தங்களைக் கொண்டிருக்கும், இதில் செக்டர் 29, கைவினைப் பூங்கா, செக்டார் 29ல் உள்ள MSME பூங்கா, அப்பேரல் பார்க், செக்டர் 32, செக்டார் 33, டாய் பார்க் மற்றும் செக்டர் 21 ஆகிய இடங்களும் அடங்கும்.. நொய்டா விமான நிலையத்தின் முதற்கட்ட பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்கள் பயன்பாட்டிற்கு விமான நிலையம் திறந்து வைக்கப் படும் பொழுது, கூடவே பாட் டாக்ஸி சேவையையும் அறிமுகப் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு சுமார் ரூ.810 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தினமும் சுமார் 37,000 பேர் பாட் டாக்ஸி சேவையை பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. எதிர்காலத்தில் உத்தரப்பிரதேச மக்களின் வரவேற்பை தொடர்ந்து இந்தியாவின் பெருநகரங்களான மும்பை,டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களிலும் பாட் டாக்ஸிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.