அசுர வேகத்தில் வீசிய காற்றில் பொத்தென விழுந்த சிக்னல் கம்பம் | chennai | mandous
மாண்டஸ் புயல் கரையை கடந்த போது, கடற்கரை பகுதிகளில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால், கேளம்பாக்கத்தில் சாலையின் நடுவே இருந்த போக்குவரத்து சிக்னல் பெயர்ந்து விழுந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பேரிடர் மீட்பு குழுவினரின் உதவியுடன் சிக்னலை அப்புறப்படுத்தினர். சென்னை மாநகரம் முழுவதும் பலத்த காற்று வீசியதில், பல்வேறு இடங்களில் இன்டர்நெட் ஒயர்கள் அறுந்து விழுந்தன. கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த இன்டர்நெட் ஒயர்கள் அறுந்து விழுந்தன. இதனால், பல்வேறு இடங்களில் இணைய சேவை பாதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 578 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் தாலுகாக்களில் 20 முகாம்கள் உருவாக்கப்பட்டு, 578 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அமுதா தெரிவித்துள்ளார்.