37 வயது பெண்ணுடன் லிவ்-இன் உறவு. உடலை படுக்கைக்கு அடியில் ஒளித்து வைத்த 25 வயது காதலன்
மும்பையை சேர்ந்த 37 வயது செவிலியரான மேகா, 25 வயதான ஹர்திக் ஷா என்பவருடன் 6 மாதங்களாக லிவ் - இன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துலிஞ்ச் பகுதியில் இருக்கும் வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் புகார் அளித்ததால், அங்கு விரைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, படுக்கையின் மெத்தைக்கு அடியில் மேகாவின் உடல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடலை கைப்பற்றிய போலீசாருக்கு, மேகா ஒரு வாரத்திற்கு முன்பு கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவான ஹர்திக் ஷாவை நாக்டாவில், ரயில்வே போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஹர்த்திக் ஷா வேலைக்கு செல்லாததால், செவிலியரான மேகாவே குடும்ப செலவுகளை பார்த்து வந்ததும், அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கொலை அரங்கேறியதும் தெரிய வந்தது. மேலும், மேகாவை கொலை செய்து விட்டு தப்பி ஓடும் போது, தனது சகோதரிக்கு ஹர்திக் ஷா குறுஞ்செய்தி அனுப்பிய தகவலும் வெளியாகியுள்ளது.