கடத்தப்பட்ட 'இந்தியன் ஏர்லைன்ஸ்'.. நடுவானில் கதறிய 193 பயணிகள்.. வரலாற்றில் இன்று... நடந்தது என்ன?

Update: 2022-12-24 13:13 GMT

1999 ஆம் ஆண்டு இதே நாளில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐ.சி. 184 மாலை 193 பேருடன் காத்மாண்டுவிலிருந்து டெல்லி புறப்பட்டது. விமானம் இந்திய வான் பகுதிக்குள் நுழைந்த போது, விமானத்தில் இருந்த ஹர்கத்-உல்-முஜாஹிதீன் பயங்கரவாதிகள், படு பயங்கர ஆயுதங்களுன் துணையோடு அந்த விமானத்தை கடத்தினர்.

பயங்கரவாதிகளின் தலைவன், விமானத்தை பாகிஸ்தானின் லாகூருக்கு இயக்க கேப்டனுக்கு உத்தரவிட்டான். ஆனால், பாகிஸ்தான் அனுமதி மறுத்தது. வானில் வட்டமடித்த விமானத்தில் எரிபொருள் தீர, தயக்கத்துடன் விமானத்தை அமிர்தசரஸில் இறங்க அனுமதிக்கிறான் தலைவன்.

விமானம் கடத்தப்பட்ட தகவலை ரகசியமாக இந்திய அரசுக்கு பகிர்ந்தார் கேப்டன் தேவி சரண். வாஜ்பாய் அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தது. பயணிகளை விடுவிக்க இந்திய சிறையில் உள்ள 36 பயங்கரவாதிகளைவிட வேண்டும்... 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டும் என அறிவித்தான் தலைவன். விமானம் மாலை 7 மணியளவில் அமிர்தசரஸில் தரையிறங்கியது.

பஞ்சாப் போலீஸ் விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதை தாமதப்படுத்த, பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க இந்திய கருப்பு பூனைகள் டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் விரைந்தது. ஏதோ பொறி வைக்கப்படுகிறது என உணர்ந்து விமானத்தை எடுக்கச் சொல்லி மிரட்டினான் தலைவன். விமானி மறுக்கவும் பயங்கரவாதியின் கத்தி, விமானப் பயணிகளில் ஒருவரான ரூபின் கட்யால் உடலில் பாய்ந்தது. அப்போதுதான் தேனிலவிருந்து திரும்பிக் கொண்டிருந்தவர் அவர். அவருடைய மனைவியின் கதறல் விமானத்தையே உலுக்கியது.

அங்கிருந்து கிளம்பிய விமானம் லாகூரில் தரையிறக்கப்பட்டது. அங்கிருந்து இரவு 10:32 மணியளவில் புறப்பட்ட விமானத்திற்கு ஓமனில் அனுமதி மறுக்கவும், துபாயில் விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் அங்கே பயங்கரவாதிகள் கொட்டத்தை அடக்க இந்திய படைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

விமானத்தில் உணவும், தண்ணீரும் தீர்ந்ததால் பயங்கரவாதிகள் அதை சப்ளை செய்யக் கேட்டார்கள். அப்போது பெண்களையும், குழந்தைகளையும் விடுவிக்க அரசு தரப்பில் கேட்கப்பட்டது. அதன்படி பெண்கள், குழந்தைகள் 25 பேர் தரையிறங்க, ரூபின் கட்யால் சடலமும் வந்தது.

அங்கிருந்து புறப்பட்ட விமானம் தலிபான் பயங்கரவாதிகளின் கோட்டையான கந்தகார் சென்றது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தலிபான் பயங்கரவாதிகள் விமானம் அருகே ராக்கெட் லாஞ்சர்களை நிறுத்தினார்கள். பேச்சுவார்த்தையில் இந்திய குழு விடாப்பிடியாக இருக்க, விமானத்தில் இருந்தவர்கள் நிலை மோசமடைய தொடங்கியது.

இறுதியாக 3 பயங்கரவாதிகளை விடுவிக்க இந்தியா சம்மதம் தெரிவித்தது. டிசம்பர் 31 ஆம் தேதி அவர்களை அழைத்துக்கொண்டு கந்தகார் சென்ற அப்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், விமானத்தில் இருந்தவர்களை பத்திரமாக அழைத்து வந்தார். அப்போது விடுவிக்கப்பட்ட பயங்கரவாதி மசூத் ஆசார், அதன் பிறகு ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தை தொடங்கி பல கொடூரமான பயங்கரவாத தாக்குதலை இந்தியாவில் நடத்தியுள்ளான்.

இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கிய தீவிரவாத தாக்குதலாகப் பார்க்கப்படும் கந்தகார் விமானக் கடத்தல் நடைபெற்ற தினம்... டிசம்பர் 24.

Tags:    

மேலும் செய்திகள்