சென்னை அடையாறு கேன்சர் மருத்துவமனையில் நவீன பரிசோதனை இயந்திரத்தை அவர் துவக்கி வைத்தார். பின்னர், தரமணியில் செயல்திட்ட நுண்ணலை மின்னனு பொறியியல் ஆய்வுக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தையும் ராஜீவ் சந்திரசேகர் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழில்நுட்பங்கள் மக்களின் வாழ்வை மாற்றும் வகையில் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்பியதாகவும், அதன்படி 2015ல் டிஜிட்டல் இந்தியா அறிமுகம் படுத்தப்பட்டதாகவும் கூறினார். தொழில்நுட்பங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை மாறி வருவதாக தெரிவித்த அமைச்சர், மின்னணு கருவிகள், மின்னணு சாதனங்கள், உபகரணங்கள் முற்றிலும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.