மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு.. இப்படி போதை பொருளுக்கு disclaimer போடுற மாதிரி... இனிமே ஆன்லைன் சூதாட்டத்துக்கும் போடனும்போல... ஏன்னா இதே ஆன்லைன் சூதாட்டம் இங்க ஒரு பேங்க் கேஷியர கொள்ளையனா மாத்திருக்கு...
வீட்டுல பாதுகாப்பு இல்லன்னுதான்... நாமலாம் பணத்தை பேங்க் லாக்கர்ல வைக்குறோம்... ஆனா, இங்க ஒரு ஊருல அந்த பேங்க்ல இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்ருக்கு...
தொடக்கத்துல மணி ஹெயிஸ்டுல வர்ர மாதிரி கொள்ளையர்களோட கைவரிசையா இருக்குமோன்னுதான் பலரும் நினச்சுருக்காங்க.... ஆனா, உண்மை என்னன்னா... பேங்க் உள்ளயே வேலைச் செஞ்ச ஒரு கருப்பாடுதான் மொத்த பணத்தையும் ஒத்த ஆளா சுருட்டி கைவரிசை காட்டிருக்கு...
வங்கியில் பணிபுரிந்த காசாளரே பணத்தை கொள்ளையடித்துவிட்டு... கொள்ளையர்கள் தன்னை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக நாடகமாடியிருக்கிறார்...
ஆனால், பணப்பையோடு சிட்டாக பறந்து சென்றவரை காவல்துறை லட்டாக தூக்கிவந்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள்... அதில்தான் கொள்ளை நாடகத்தின் பகிரங்க பின்னணி போலீசாரையே அதிரவைத்திருக்கிறது.
இந்த சிசிடிவி காட்சியில் வாடிக்கையாளர்கள் கொடுத்த பணத்தை கல்லாவில் வைக்காமல்... கட்டுக்கட்டாக சுருட்டி பேன்ட் பாக்கெட், சட்டை பாக்கெட், பக்கத்திலிருக்கும் பேக் என சிறுக சிறுக சொறுகி வைக்கும் இவர் முகேஷ்... 30 வயதாகும் இவருக்கு திருமணமாகவில்லை.
விழுப்புரம் மாவட்டம் , இளங்காடு பகுதியைச் சேர்ந்த முகேஷ் மரக்காணத்தில் உள்ள வங்கியில் கேஷியராக மூன்று வருடங்கள் வேலைப் பார்த்து வந்துள்ளார். ஆனால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சிந்தாமணி பகுதியிலுள்ள இந்தியன் பேங்கில் காசாளராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்...
வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டதால் வங்கியின் கணக்கு வழக்குகள் அனைத்தும் முகேஷிற்கு அத்துப்படி... இந்தச் சூழலில்தான் சம்பவத்தன்று வசூல் செய்த பணத்தில் 43 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயை பேங்க் லாக்கரில் வைக்காமல்...தன்னுடைய பையில் வைத்து கொண்டு தலைமறைவாகியிருக்கிறார் முகேஷ்...
முகேஷ் பணத்தை திருடும் காட்சி சிசிடிவில் பதிவாகியிருந்தாலும்... அவை அனைத்தும் பேங்க் ஊழியர்கள் கண்ணில் சிக்காமல் தப்பியிருக்கிறது.
ஆனால், சில மணி நேரம் கழித்து பேங்கிலிருந்து முகேஷ் காணாமல் போயிருப்பது வங்கி மேலாளருக்கு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது... உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்... காணாமல் போனவரை கண்டுபிடிக்க அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.அதில் தன்னை கொள்ளை கும்பல் கடத்தி பணத்தை திருடிச் சென்றதாக உறவினருக்கு முகேஷ் வாட்ஸப்பில் வாயிஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்...
அனைவரும் முகேஷை கொள்ளை கும்பல்தான் கடத்தியிருக்கிறது என்று நம்பியிருக்கிறார்கள்... ஆனால், காவல்துறைக்கு மட்டும் சந்தேகம் வலுத்திருக்கிறது... முகேஷின் செல்போன் நம்பரை டிராக் செய்திருக்கிறார்கள். அதில் முகேஷின் செல்போன் சிக்னல் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் காட்டியிருக்கிறது. அடுத்த நொடியே ஸ்பாட்டிற்கு பறந்த காவல்துறை பையுடன் நின்றுக்கொண்டிருந்தவரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்திருக்கிறார்கள். அவரிடம் நடத்திய விசாரணையில்தான் அனைத்து உண்மைகளும் அம்பலமாகியிருக்கிறது.
சூதாட்டத்தில் மூழ்கிபோன முகேஷ்... ஓவர் நைட்டில் பணக்காரராக நினைத்து மொத்த பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். மேலும் அக்கம்பக்கத்தில் பணத்தை கடன்வாங்கி அந்த பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் போட்டு ஏமாற்றமடைந்திருக்கிறார்.. இதனால் ஊரைச் சுற்றிலும் ஏற்பட்ட கடன் முகேஷின் கழுத்தை நெரித்திருக்கிறது...
அப்போதுதான் வங்கியிலிருக்கும் பணத்தை கொள்ளையடித்து கடனை அடைக்க நினைத்திருக்கிறார்...
களவாடிய கையோடு முகேஷ் தன்னுடைய அக்காவிற்கு ஒரு லட்ச ரூபாய் பணத்தை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் காவல்துறையிடம் சிக்காமல் இருக்க தன்னை கடத்தியதாகவும் முகேஷ் நாடமாடியது விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவுச் செய்த போலீசார் முகேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...